ஊசி வைத்து இருந்தது கண்டுபிடிப்பு: காமன்வெல்த் போட்டியில் இருந்து 2 இந்திய வீரர்கள் வெளியேற உத்தரவு


ஊசி வைத்து இருந்தது கண்டுபிடிப்பு: காமன்வெல்த் போட்டியில் இருந்து 2 இந்திய வீரர்கள் வெளியேற உத்தரவு
x
தினத்தந்தி 13 April 2018 9:00 PM GMT (Updated: 13 April 2018 8:28 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு தடகள போட்டியில் டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் ராகேஷ்பாபு, 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் 13-வது இடம் பெற்ற இந்திய வீரர் கே.டி.இர்பான் ஆகியோர் தங்கி இருந்த அறையில் ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டு தடகள போட்டியில் டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் ராகேஷ்பாபு, 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் 13-வது இடம் பெற்ற இந்திய வீரர் கே.டி.இர்பான் ஆகியோர் தங்கி இருந்த அறையில் ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காமன்வெல்த் மருத்துவ கமிஷன் புகார் அளித்ததை தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு பெடரேஷன் கோர்ட்டு இரண்டு வீரர்கள் மற்றும் தடகள பயிற்சியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. இருவரும் தங்களது அறையில் ஊசி தவறுதலாக இடம் பெற்று இருந்து இருக்கலாம். அது தங்களுக்கு தெரியாது என்று மறுத்தனர். இந்த விளக்கத்தை கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

ராகேஷ் பாபு, கே.டி.இர்பான் ஆகியோர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க தடை விதித்து காமன்வெல்த் விளையாட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அத்துடன் அவர்களின் போட்டி அங்கீகாரத்தை உடனடியாக இடைநீக்கம் செய்தது. இருவரும் விளையாட்டு கிராமத்தில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்த தகவலை காமன்வெல்த் விளையாட்டு பெடரேஷன் தலைவர் லூயிஸ் மார்ட்டின் தெரிவித்தார். இந்திய வீரர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து தங்களது நாட்டுக்கு விரைவில் திரும்ப இந்திய காமன்வெல்த் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். காமன்வெல்த் போட்டி தொடங்கும் முன்பே ஊசி பயன்படுத்தியதற்காக இந்திய குத்துச்சண்டை அணியின் டாக்டரை காமன்வெல்த் போட்டி அமைப்பு கமிட்டி எச்சரிக்கை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊசி மூலம் ஊக்க மருந்தை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் முன் அனுமதி பெறாமல் ஊசி பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது என்று அனைத்து போட்டியாளர்களுக்கும் போட்டி அமைப்பு குழு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

2 வீரர்கள் நீக்கம் குறித்து இந்திய தடகள சம்மேளன பொதுச்செயலாளர் சி.கே.வல்சன் கருத்து தெரிவிக்கையில், ‘இது எங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீரர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். போட்டி முடிந்த பிறகு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story