சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார், சாய்னா பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்


சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார், சாய்னா பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்
x
தினத்தந்தி 15 April 2018 9:30 PM GMT (Updated: 15 April 2018 7:27 PM GMT)

காமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சக நாட்டவர் சிந்துவை நேர் செட்டில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்தியா பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.

கோல்டு கோஸ்ட், 

காமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சக நாட்டவர் சிந்துவை நேர் செட்டில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்தியா பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.

காமன்வெல்த் போட்டி

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதன்படி 21-வது காமன்வெல்த் விளையாட்டு ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்டுகோஸ்டில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்- வீராங்கனைகள் பதக்கத்துக்காக முட்டிமோதி தங்களது திறமையை வெளிக்காட்டினர்.

முதல் நாளில் இருந்தே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய மூன்று நாடுகள் தான் அதிகமான பதக்கங்களை குவித்து முதல் 3 இடங்களை பிடித்தன. கடைசி நாள் வரை அந்த நிலையே நீடித்தது. போட்டியின் கடைசி நாளான நேற்று இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தது.

சாய்னாவுக்கு தங்கம்

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் சாய்னாவும், பி.வி.சிந்துவும் மல்லுகட்டினர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த மோதலில் சாய்னா முதல் புள்ளியில் இருந்தே ஆக்ரோஷமாகவும், வேகமாகவும் மட்டையை சுழட்டினார். அதன் மூலம் சிந்துவுக்கு கடுமையான நெருக்கடி தந்த சாய்னா முதல் செட்டை எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் சிந்து வரிந்து கட்டி நின்றதால் ‘நீயா-நானா’ என்று களத்தில் அனல் பறந்தது. 19-19, 21-21 என்று வரை சமநிலை நீடித்தது. இறுதியில் இந்த செட்டுக்குரிய புள்ளியையும் சாய்னா வசப்படுத்தினார்.

56 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 21-18, 23-21 என்ற செட் கணக்கில் சிந்துவை தோற்கடித்து, தங்கப்பதக்கத்தை ருசித்தார். தோல்வி அடைந்த சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஐதராபாத்தில் வசிக்கும் 28 வயதான சாய்னா ஏற்கனவே 2010-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்றிருந்தது நினைவு கூரத்தக்கது.

ஸ்ரீகாந்த் தோல்வி

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த், முன்னாள் நம்பர் ஒன் வீரர் மலேசியாவின் லீ சோங் வெய்யை எதிர்கொண்டார். 65 நிமிடங்கள் போராடிய ஸ்ரீகாந்த் 21-19, 14-21, 14-21 என்ற செட் கணக்கில் அனுபவம் வாய்ந்த லீ சோங் வெய்யிடம் வீழ்ந்தார். இதையடுத்து ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல்பட்டுக் கொண்டார். தனிநபர் பிரிவில் லீ சோங் வெய் தொடர்ந்து 3-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார்.

ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சத்விக் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி 13-21, 16-21 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்- கிறிஸ் லாங்ரிட்ஜ் இணையிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. காமன்வெல்த் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுதான்.

தீபிகா-ஜோஸ்னாவுக்கு வெள்ளிப்பதக்கம்

ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தீபிகா பலிக்கல்-ஜோஸ்னா சின்னப்பா கூட்டணி, நியூசிலாந்தின் ஜோயலி கிங்- அமன்டா லாண்டர்ஸ் மர்பி இணையை எதிர்கொண்டது.

22 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் தீபிகா-ஜோஸ்னா ஜோடி 9-11, 8-11 என்ற நேர் செட்டில் நியூசிலாந்து ஜோடியிடம் பணிந்தது. மகுடத்தை தக்கவைக்க தவறிய சென்னையைச் சேர்ந்த தீபிகா-ஜோஸ்னா இணைக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.

தமிழக வீரர்களுக்கு வெண்கலப்பதக்கம்

டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் சரத்கமல், இங்கிலாந்தின் சாமுல் வால்கருடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 11-7, 11-9, 9-11, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்து வெண்கலப்பதக்கத்துக்கு முத்தமிட்டார்.

இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடிகளே சந்தித்தன. இதில் இந்தியாவின் சத்யன்-மனிகா பத்ரா ஜோடி 11-6, 11-2, 11-4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர்களான சரத்கமல்- மவுமா தாஸ் இணையை பந்தாடி வெண்கலப்பதக்கத்தை வென்றது. சத்யன் தமிழக வீரர் ஆவார்.

நிறைவு விழா

இரவில் கண்கவர் நடனம், இசை நிகழ்ச்சி, வாணவேடிக் கையுடன் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. நிறைவு விழா அணி வகுப்பில் இந்திய அணிக்கு தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கி சென்றார்.

பதக்கப்பட்டியலில் மொத் தம் 43 நாடுகள் இடம் பிடித்தன. 474 வீரர்- வீராங்கனைகளை களம் இறக்கிய ஆஸ்திரேலியா 80 தங்கம் உள்பட 198 பதக்கங்களை குவித்து முதலிடத்தை தட்டிச் சென்றது. ஆஸ்திரேலியா நீச்சலில் பெரும்வாரியான பதக்கங்களை அள்ளியது. நீச்சலில் மட்டும் அந்த நாடு 28 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம் என்று 73 பதக்கங்களை வேட்டையாடியது. இங்கிலாந்து 45 தங்கம் உள்பட 136 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பெற்றது.

இந்தியா 3-வது இடம்

இந்த போட்டிக்கு 218 வீரர், வீராங்கனைகளை அனுப்பிய இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என்று மொத்தம் 66 பதக்கங்களை மகசூல் செய்து 3-வது இடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக துப்பாக்கி சுடுதலில் 7 தங்கம் உள்பட 16 பதக்கமும், மல்யுத்தத்தில் 5 தங்கம் உள்பட 12 பதக்கமும் கிடைத்தன.

2014-ம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலத்துடன் 64 பதக்கங்கள் சேர்த்து 5-வது இடத்தை பெற்றிருந்தது. இந்த முறை நமது தேசம் அதை விட நன்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. 88 ஆண்டு கால காமன்வெல்த் போட்டி வரலாற்றில் 2010-ம் ஆண்டு சீசனில் 38 தங்கம் உள்பட 101 பதக்கங்கள் குவித்து 2-வது இடம் பிடித்ததே ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த காமன்வெல்த் போட்டி 2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்கிறது. நிறைவிழாவில் காமன்வெல்த் விளையாட்டுக்குரிய கொடி, பர்மிங்காம் மேயர் அனி அன்டர்வுட்டிடம் வழங்கப்பட்டது.

பிரதமர் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் சாதித்த இந்திய வீரர், வீராங் கனைகளுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட இந்திய குழுவினர் அனைவரும் நம் ஒவ்வொருவரையும் பெருமைப்பட வைத்திருக்கிறார்கள். பதக்கம் வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த போட்டியில் இந்தியாவின் சாதனை, இளைஞர்களின் விளையாட்டு வேட்கையை தூண்டும் என்று நம்புகிறேன்’ என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

டேபிள் டென்னிசில் கலக்கல்

டேபிள் டென்னிசில் இந்திய குழுவினர் 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மொத்தம் 8 பதக்கங்களை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டினர். இந்த காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிசில் அதிக பதக்கங்களை வென்ற நாடு இந்தியா தான். இதன் மூலம் டேபிள் டென்னிசில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்து இருக்கிறது. இதற்கு அடுத்து சிங்கப்பூர் 6 பதக்கம் பெற்றிருந்தது.

டேபிள் டென்னிசில் டெல்லியை சேர்ந்த 22 வயது வீராங்கனை மனிகா பத்ரா 4 பதக்கம் வென்று (ஒற்றையர் மற்றும் அணிப்பிரிவில் தங்கம், பெண்கள் இரட்டையரில் வெள்ளி, கலப்பு இரட்டையரில் வெண்கலம்) முத்திரை பதித்தார். இதே போல் தமிழக முன்னணி வீரர் சரத் கமல் 3 பதக்கம் (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) வென்று கவனத்தை ஈர்த்தார்.

‘உணர்வுபூர்வமான தருணம்’

“லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப்பதக்கம், என்னுடைய ‘நம்பர் ஒன்’ தரவரிசை ஆகியவற்றுக்கு அடுத்து சிறந்ததாக இந்த காமன்வெல்த் தங்கப்பதக்கத்தை மதிப்பிடுகிறேன். இந்த பதக்கத்தை எனது பெற்றோர் மற்றும் தேசத்திற்கு பரிசாக அளிக்கிறேன். காயத்தால் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஏமாற்றத்தை சந்தித்த பிறகு, இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணமாக அமைந்துள்ளது. சிந்து என்னை விட உயரமானவர். நீளமான கால்களை கொண்டவர் என்பதால் மைதானத்தில் எங்கு பந்து சென்றாலும் என்னை விட எளிதாக திருப்பி அடிக்க முடியும். அதே சமயம் நான் அங்கும், இங்குமாக ஓட வேண்டி இருக்கும். கடந்த சில மாதங்களில் நான் 5 கிலோ எடையை குறைத்திருப்பது வேகமாக ஓடுவதற்கு உதவிகரமாக இருந்தது. தொடர்ச்சியாக விளையாடியதால் இப்போது எனது கால்கள் சோர்ந்து போய்விட்டன”.

-சாய்னா நேவால்

Next Story