மணியான மணிகா பத்ரா!


மணியான மணிகா பத்ரா!
x
தினத்தந்தி 21 April 2018 8:12 AM GMT (Updated: 21 April 2018 8:12 AM GMT)

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மணிகா.

காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிசில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று பதக்க அறுவடை நடத்தி நாடு திரும்பியிருக்கும் மணிகா பத்ராவை ‘தங்கப் பெண்’ என்று கொண்டாடுகிறார்கள், ரசிகர்கள்.

டெல்லி விமான நிலையத்தில் தன்னை வரவேற்கத் திரண்டிருந்த திரளான ரசிகர்கள் மத்தியில் பேசிய மணிகா, ‘‘காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது கனவு. அந்தவகையில் காமன்வெல்த்தில் எனது செயல்பாடு குறித்து நான் ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார் பூரிப்புடன்.

மணிகா பத்ராவின் மணியான காமன்வெல்த் பயணத்தில் ரொம்பவே தித்திப்பானது, உலக அளவில் நான்காவது ரேங்க் வகிக்கும், பல ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சீன வீராங்கனை பெங்க் டியான்வீயை இவர் வீழ்த்தியதுதான்.

உலக அளவில் 58-வது தரநிலையில் உள்ள பத்ரா, டியான்வீயை நான் வெல்வேன் என்று கனவுகூடக் கண்டதில்லை என்கிறார்.

‘‘ஓர் ஒலிம்பிக் வீராங்கனையை, உலகில் 4-வது இடத்தில் இருப்பவரை தோற்கடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. நான் எனது மட்டையில் பயன்படுத்தும், சிறு சிறு மொட்டுகள் கொண்ட ரப்பர், டியான்வீக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதை மட்டுமே நான் எனது பலமாகப் பயன்படுத்தவில்லை. நான் எனது ஆட்டத்தை மாற்றிக்கொண்டே இருந்தேன். டியான்வீ செட்டிலாக நான் அனுமதிக்க விரும்பவில்லை. எனவே, இரண்டாவது கேமுக்குப் பின் நான் எனது ரப்பரை மாற்றிவிட்டேன்’’ என்று தனது திட்டம் பற்றி விவரிக்கிறார், மணிகா.

‘‘டியான்வீக்கு எதிராக நான் விளையாடுவது இதுவே முதல்முறை. உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான அவரை நான் வென்றுவிட்டேன் என்று உணர்ந்தபோது, உலகத்தின் உச்சியில் இருப்பதைப் போல உணர்ந்தேன்’’ என்று சிலிர்க்கிறார்.

கடந்த காமன்வெல்த் போட்டியில் வெறுங்கையுடன் திரும்பியது இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி. ஆனால் இப்போதோ மணிகாவே கழுத்து நிறைய பதக்கங்களுடன் வந்திருக்கிறார். இவர் மட்டும் தனிநாடாக இருந்திருந்தால், 71 நாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டியின் பதக்கப் பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித் திருப்பார்.

‘‘காமன்வெல்த்தில் மணிகா புரிந்த சாதனைக்கு இணையே இல்லை. நான் நினைப்பதை அவர் நிஜத்தில் முடிப்பார்’’ என்கிறார், மணிகாவின் பெருமித பயிற்சியாளர் சந்தீப் குப்தா.

மணிகா பத்ராவுக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது! 

Next Story