துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 15 Jun 2018 10:45 PM GMT (Updated: 15 Jun 2018 6:52 PM GMT)

ரொனால்டோ, ஸ்பெயினில் உள்ள கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.


ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை?

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற ரியல்மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல்மாட்ரிட் அணிக்காக ஆடுவதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ அந்த நாட்டு அரசுக்கு சரியாக வருமான வரி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது வரிஏய்ப்பு வழக்கு தொடர்ந்து ஸ்பெயின் அரசு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் ரொனால்டோ, வருமானவரித்துறையுடன் சமரச தீர்வு கண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.148 கோடி அபராதம் செலுத்தவும் அவர் சம்மதம் தெரிவித்து இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக 2 ஆண்டு தண்டனை பெறுபவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா?

இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் இன்று நடக்கிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வியூகங்களை வகுத்துள்ளனர். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது

இலங்கை 253 ரன்னில் ஆல்-அவுட்

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குரோஸ்ஐஸ்லெட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 11-வது சதத்தை நிறைவு செய்த கேப்டன் தினேஷ் சன்டிமால் 119 ரன்களுடன் களத்தில் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாளில், 27 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

Next Story