மேரி கோம்: பதக்கத்திற்கு பின்னால் ஒரு தியாகம்


மேரி கோம்: பதக்கத்திற்கு பின்னால் ஒரு தியாகம்
x
தினத்தந்தி 17 Jun 2018 6:57 AM GMT (Updated: 17 Jun 2018 6:57 AM GMT)

எளிய குடும்பத்தில் பிறந்து, எத்தகைய வசதி வாய்ப்பும் இல்லாமல் வளர்ந்து, விளையாட்டு ஆர்வத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு குத்துச்சண்டை போட்டியில் கோலோச்சிக்கொண்டிருப்பவர், மேரிகோம்.

ளிய குடும்பத்தில் பிறந்து, எத்தகைய வசதி வாய்ப்பும் இல்லாமல் வளர்ந்து, விளையாட்டு ஆர்வத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு குத்துச்சண்டை போட்டியில் கோலோச்சிக்கொண்டிருப்பவர், மேரிகோம். மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்னரும் போட்டிகளில் துடிப்புடன் பங்கேற்று வெற்றிகளை குவித்து அனைத்து தரப்பினரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்ப்பவர். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமையும் சேர்த்துவிட்டார். திருமணத்திற்கு பின்பும் பெண்களால் சாதித்து காட்ட முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய வெற்றிக்கு பின்புலத்தில் கணவர் ஒன்லர் கோம் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் மேரிகோமிடம் இருந்த திறமைகளை அறிந்து அவருக்கு எல்லா விதத்திலும் துணையாக இருந்தவர் அவர்தான்.

திருமணம், குழந்தை, குடும்பம் எல்லாமுமே மேரிகோமின் விளையாட்டு முன்னேற்றத்துக்கு ஒருவகையில் தடையாகத்தான் இருந்தது. அவைகளை எல்லாம் தாண்டி அவர் குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொள்வது அவருக்கு மிகப்பெரிய சவாலாகவே அமைந்தது. அந்த சவாலில் மனைவிக்கு துணையாக நின்றவர், ஒன்லர் கோம். மனைவிக்கு குழந்தைகளை பற்றிய கவலை வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர் தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு குழந்தைகள் பராமரிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மேலும் மேரிகோம் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே கவனித்துக் கொண்டார். தன் வளர்ச்சிக்காக கணவர் செய்த தியாகங்கள் ஏராளம் என்கிறார் மேரிகோம்.

‘‘விளையாட்டில் நிலையான இடத்தைப் பிடிக்க எவ்வளவோ சிரமங்களை அனுபவித்தேன். சிலசமயம் ‘இதெல்லாம் நமக்கு தேவையில்லை. விளையாட்டை விட்டு ஒதுங்கிக்கொள்ளலாம்’ என்றுகூட நினைத்தேன். அந்த சமயத்தில் என் கணவர் கை கொடுத்தார். நான் நினைத்ததை சாதிக்க துணையாக இருந்தார். எனது வெற்றிகள் அவருக்குத்தான் போய் சேரவேண்டும். ஒருவர் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய அவருக்கு உறுதுணையாக அவரது நலனில் அக்கறை கொண்ட ஒருவர் உடன் இருக்க வேண்டும். யாராலும் தனியாக உயர்ந்து விட முடியாது. நான் வாழ்க்கையில் உயர எல்லா விதத்திலும் என் கணவர் காரணமாக இருந்திருக் கிறார்..’’ என்கிறார், மேரிகோம்.

குத்துச்சண்டை பயிற்சிக்கு மேரிகோம் செல்லும்போது வீட்டை கவனித்துக் கொள்வது, குழந்தைகளை பராமரிப்பது, பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது என எல்லா வேலைகளையும் ஒன்லர் கோம் கவனித்துக்கொண்டார். அப்போது, அவர் வீட்டு ேவலைகளை செய்வதை பார்த்து அக்கம் பக்கத்தினர் கேலி செய்திருக்கிறார்கள். அந்த கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேரிகோம் பதக்கங்களை குவிக்க தொடங்கினார். மேரிகோம் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பிறகு ஒன்லர் கோம் தியாகமும் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.

குத்துச்சண்டை போட்டி என்பது முன்பு ஆண்களுக்கு உரிய விளையாட்டாகத்தான் இருந்தது. பெண்களுக்கு தசைகள் அந்த அளவுக்கு திடமாக இருப்பதில்லை. தசைகளை வலுப் படுத்த பிரத்யேக பயிற்சிகளை செய்ய வேண்டும். அத்தகைய பயிற்சிகளை கடுமையாக பெற்று, குத்துச்சண்டையில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார், மேரிகோம். அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா, அதற்காகவே தனி பயிற்சிகள் பெற்றார். அந்த பயிற்சிகள் தனக்கு மிக கடுமையாக இருந்ததாகவும் சொல்கிறார்.

‘‘ஒருசில விஷயங்களை ஒப்பனைேபாட்டு சமாளிக்க முடியாது. அதற்கு நாம் சில பயிற்சிகளை பெற்றாகவேண்டும். மேரிகோம் கதாபாத்திரம் மிகவும் பாராட்டுக்குரியது. அவர் குத்துச்சண்டை வீராங்கனையாக பார்ப்பதற்கு முரட்டு சுபாவம் கொண்டவராக தெரிந்தாலும், பழகுவதற்கு மிகவும் மென்மையானவர். என்னிடம் பேசும்போது சாதாரணப் பெண்மணியைப் போல தன் குழந்தைகள் பற்றியும் குடும்பம் பற்றியும் பேசுவார். கணவரைப் பற்றி நிறைய பேசுவார். இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கைத் துணை அமைவது மிகவும் கடினம் என்று சொல்வார். ‘குத்துச்சண்டையில் எனக்கிருந்த ஆர்வம் வேறு எதிலும் ஏற்படவில்லை. நான் என்ன செய்வது? இது பெண்கள் விளையாட்டு அல்ல தான். பெரும்பாலும் பெண்களின் உடலமைப்பு இதற்கு ஏற்றதல்ல. இருந்தாலும் ஆர்வம் என்னை வீராங்கனையாக்கியது’ என்று மேரிகோம் சொன்னார்.

நான் அவரைப் போல் நடிப்பதற்காக விசேஷ பயிற்சியாளர் களிடம் தினமும் 12 மணி நேரம் வரை பயிற்சி பெற்றேன். குத்துச்சண்டையும் கற்றுக்கொண்டேன். திரையில் என்னை பார்த்த மேரிகோம், ‘பரவாயில்லையே என்னைவிட நன்றாகவே சண்டையிடுகிறீர்கள்’ என்றுகூறி, ஆச்சரியப்பட்டார். அதற்கு தானே அத்தனை பாடுபட்டேன் என்று நினைத்துக் கொண்டேன். மேரியின் கணவர் பாராட்டுக்குரியவர். இப்படி ஒரு கணவர் அமைந்தால் யார் வேண்டுமானாலும் வீராங்கனை ஆகலாம். வெற்றியாளர்கள் தோன்றுவதில்லை உருவாக்கப்படுகிறார்கள்’’ என்கிறார், பிரியங்கா சோப்ரா.

ஒன்லர் கோம் மட்டுமல்ல, ஏராளமான கணவன்மார்கள் தங்கள் மனைவிமார்கள் விளையாட்டில் சாதிப்பதற்கு பக்கபலமாக இருக்கிறார்கள். தட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியாவுக்கு அவருடைய கணவர் வீரேந்திரா பூனியா பயிற்சியாளராகவே மாறிப்போனார். காமன்வெல்த் போட்டியில் கிருஷ்ணா பதக்கம் வெல்வதற்கு வீரேந்திராவின் கடின பயிற்சி அடித்தளமாக அமைந்தது. அதனால் அவருக்கு சிறந்த பயிற்சியாளர் விருது வழங்கி கவுரவித்தனர். ‘கணவர் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம்’ என்கிறார், கிருஷ்ணா பூனியா.

‘‘கணவரே பயிற்சியாளராக இருப்பது பலவகையில் எனக்கு சவுகரியமாக இருக்கிறது. நான் போகும் இடங்களுக்கெல்லாம் கூடவே அழைத்துபோக வசதியாக இருக்கிறது. அவர் விளையாட்டிற்கு அப்பாலும் என்னை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பார். என் உணவு பழக்கங்கள், என் பலம்-பலவீனம் எல்லாம் அவருக்கு தெரியும். அதனால் எப்போது தவறு நடந்தாலும் உடனுக்குடன் சரி செய்து விடுவார். விளையாட்டு வீராங்கனைகள் அனைவரும் பெரிய பணக்காரர்கள் இல்லை. தனக்கென்று தனியாக பயிற்சியாளர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பண வசதி அவர் களுக்கு இல்லை. அதனால் கணவரே பயிற்சியாளராக இருப்பது சிறப்பு’’ என்கிறார், கிருஷ்ணா பூனியா.

கணவர் அமைவதும் இறைவன் கொடுத்த வரமே!

Next Story
  • chat