குறைந்த வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்று சென்னை மாணவர் சாதனை


குறைந்த வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்று சென்னை மாணவர் சாதனை
x
தினத்தந்தி 24 Jun 2018 9:15 PM GMT (Updated: 24 Jun 2018 8:57 PM GMT)

செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து என்பது குறிப்பிட்ட வீரரின் திறமையை பறைசாற்றக்கூடிய ஒன்றாகும்.

சென்னை, 

செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து என்பது குறிப்பிட்ட வீரரின் திறமையை பறைசாற்றக்கூடிய ஒன்றாகும். ஆனால் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து எளிதில் கிடைத்து விடாது. அதற்கு செஸ் தரவரிசையில் 2,500 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்று பெரிய தொடர்களில் தரவரிசையில் உயரிய நிலையில் உள்ள வீரர்களை வீழ்த்தி சாதிக்க வேண்டும். அதாவது இந்த வகையில் மூன்று தேர்வு நிலையை அடைய வேண்டும்.

சென்னை முகப்பேரை சேர்ந்த 8–ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா தற்போது செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்று புதிய வரலாறு படைத்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு பெரிய போட்டிகளில் அசத்தியிருந்த அவர் தற்போது இத்தாலியில் நடந்து வரும் கிரெடின் ஓபன் செஸ் தொடரில் 8 ரவுண்ட் முடிவில் 6.5 புள்ளிகளுடன் முன்னிலை வகிப்பதுடன், கிராண்ட்மாஸ்டருக்குரிய 3–வது தேர்வு நிலையை எட்டியிருக்கிறார்.

பிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும். இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், ஒட்டுமொத்த அளவில் 2–வது வீரர் என்ற மகத்தான பெருமையை பெற்றுள்ளார். உக்ரைனின் செர்ஜி கர்ஜாகின் 2002–ம் ஆண்டு, தனது 12 ஆண்டு 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் ஆனதே சாதனையாகும். முன்னாள் உலக சாம்பியன் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தனது 18–வது வயதில் தான் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரக்ஞானந்தாவுக்கு, ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இது நம்ப முடியாத சாதனை’ என்று பாராட்டியுள்ளார்.


Next Story