விபத்தும்.. விளையாட்டும்..


விபத்தும்.. விளையாட்டும்..
x
தினத்தந்தி 22 July 2018 7:02 AM GMT (Updated: 22 July 2018 7:02 AM GMT)

ஏக்தா, 18 வயதில் விபத்தில் சிக்கி முதுகுதண்டுவட பாதிப்புக்கு ஆளானவர்.

நடக்கமுடியாமல் சக்கர நாற்காலிக்குள் முடங்கிய ஏக்தா, விளையாட்டு மீது கொண்ட தீராத மோகத்தால் இந்தியாவுக்கு தங்க பதக்கங்களை வென்று தரும் வீராங்கனையாக மாறியிருக்கிறார்.

சமீபத்தில் துனிசியாவில் நடந்த உலக பாரா தடகள போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றிருக்கிறார். ‘கிளப் த்ரோ’ மற்றும் தட்டு எறிதல் போட்டிகளில் ஏதாவதொரு பதக்கத்தை தக்க வைத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஏற்கனவே 2016-ம் ஆண்டு பெர்லினில் நடந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளிலும் தொடர்ந்து பதக்கங் களை குவித்து வருகிறார். தற்போது 30 வயதாகும் ஏக்தா, அரியானாவை சேர்ந்தவர்.

டாக்டராக வேண்டும் என்பதுதான் இவரது விருப்பமாக இருந்திருக்கிறது. அதற்காக படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்திருக்கிறார். மருத்துவப் படிப்புக்கான நுழைவு தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற சென்றபோது ஏற்பட்ட விபத்து அவருடைய வாழ்க்கை பாதையையே மாற்றி அமைத்து விட்டது. அந்த நிகழ்வினை நினைவு கூர்கிறார்.

‘‘மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி பெறுவதற்காக சக மாணவிகளுடன் காரில் சென்றேன். நாங்கள் பயணம் செய்த கார் திடீரென்று பழுதாகி விட்டது. டிரைவர் காரை சாலையோரம் நிறுத்தி வேறு டயர் மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது காய்கறிகள் ஏற்றி வந்த லாரி திடீரென்று நிலைதடுமாறி நாங்கள் இருந்த கார் மீது சரிந்து விழுந்து விட்டது. நாங்கள் காருக்குள் அகப்பட்டுக்கொண்டோம். வெளியே வரமுடியாமல் கதறினோம். லாரியில் பாரம் அதிகமாக இருந்ததால் இடுபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து விட்டோம்’’ என்கிறார்.

ஏக்தாவுடன் 7 மாணவிகள் சென்றிருக்கிறார்கள். அவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் கள். ஏக்தா படுகாயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார். எனினும் முதுகு தண்டுவடமும், தோள்பட்டையும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. முதுகெலும்பு சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. ஒன்பது மாதங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றிருக்கிறார். ஆனாலும் எழுந்து நடமாட முடியாத நிலையே நீடித்திருக்கிறது.

இதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சிகிச்சையை தொடர்ந்திருக்கிறார். ஆனாலும் எழுந்து நடமாடும் கனவு கானல்நீராகி் விட்டது. விபத்து ஏற்படுத்திய மன வலியில் இருந்து மீள்வதற்கு மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அரசு கல்லூரியில் சேர்ந்து ஆங்கில இலக்கிய பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து பட்டமும் பெற்றுவிட்டார். வீட்டுக்குள் ளேயே முடங்கி கிடக்காமல் சக மனிதர்களை போல தன்னால் முடிந்த எல்லா வேலை களையும் செய்கிறார்.

சிறிது காலம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர் பின்பு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் தன்னை தயார்படுத்தியிருக்கிறார். முதல் முயற்சியில் தோல்வியை தழுவியவர், நான்கு ஆண்டுகள் கழித்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். ஆனால் விளையாட்டுதான் அவருக்கு விருப்ப மானதாக இருந்திருக்கிறது. அர்ஜூனா விருது பெற்ற அமித் குமார் சரோஹா விடம் பயிற்சி பெற தொடங்கி இருக்கிறார்.

விளையாட்டு மீது நாட்டம் கொண்ட தற்கான காரணத்தை விவரிக்கிறார். ‘‘விளையாட்டுதான் என் உடல் பாகங் களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி கொடுக்கிறது. நான் சகஜ நிலைக்கு திரும்புவதற்கு உடற்பயிற்சிதான் உதவிகரமாக இருந்தது. அமித்குமார் எனக்கு போன் செய்து, ‘நீ தட்டு எறிதல் விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறாயா?’ என்று கேட்டார். எனக்கு அதில் ஆர்வம் இருந்ததால் சேர்ந்துவிட்டேன்’’ என்கிறார்.

ஏக்தா தட்டு ஏறிதல் மட்டுமின்றி ‘கிளப் த்ரோ’ விளையாட்டிலும் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார். அதன் பிறகு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தொடங்கியவர் 2016-ம் ஆண்டு முதல் பரிசுகளை வென்று வருகிறார். வருகிற அக்டோபர் மாதம் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வெல்லும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அரியானா மாநில அரசின் வேலைவாய்ப்பு துறையில் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். எனினும் தினமும் 3 மணி நேரம் பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக் கிறார். வார இறுதி நாட்களிலும் பயிற்சியாளர் மூலம் பயிற்சியை தொடர்கிறார். 

Next Story