தங்கம் வென்று திரும்பிய இந்திய வீராங்கனைக்கு விமான நிலையத்தில் நிச்சயதார்த்தம்


தங்கம் வென்று திரும்பிய இந்திய வீராங்கனைக்கு விமான நிலையத்தில் நிச்சயதார்த்தம்
x
தினத்தந்தி 28 Aug 2018 7:26 AM GMT (Updated: 2018-08-28T12:56:25+05:30)

தங்கம் வென்று திரும்பிய இந்திய வீராங்கனைக்கு விமான நிலையத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

புதுடெல்லி,

ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜகர்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட் டியில் கலந்து கொண்டார்.

இதில்  பெண்கள் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட் டியில் ஜப்பானின் யூகி யிரியை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியின், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் இறுதியில் யூகியை தோற்கடித்து தங்கம் வென்றார்.

தங்க மங்கையாக இந்தியா திரும்பிய இவருக்கு டெல்லி விமான நிலையத்தில் வைத்து இவரது நீண்ட நாள் நண்பரான சோம்வீர் ரதியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.

ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை, வினேஷ் போகத்திற்கு கிடைத்திருக்கிறது. இவர் இந்திய நாட்டிற்கு பல வெற்றிகளை தேடிக்கொடுத்திருக்கிறார். ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகளில் பல வெற்றி களை ருசித்திருக்கும் வினேஷ் போகத்திற்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் சவாலான ஒன்றாகவே இருந்தன. 2014-ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்ற வினேஷ் போகத்திற்கு, தங்கப் பதக்கம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் கடின உழைப்பாலும், விடாநம்பிக்கையாலும் தங்க பதக்கத்தை எட்டி பறித்திருக்கிறார். ஆம்..! தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் தங்கத்தை வென்றிருக்கிறார்.

‘‘இந்த வெற்றி சுலபமாக கிடைக்கவில்லை. தகுதி சுற்றுப்போட்டியில் என்னுடன் மோதிய சீனாவின் யனன் சன், சவாலான வீராங்கனை. 2015-ம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அவரிடம் பலப்பரீட்சை நடத்தி, தோல்வியை தழுவினேன். அதேசமயம் அந்த தோல்விக்கு பரிசாக, முழங்கால் காயத்தையும் பெற்றேன். தோல்வியும், உடல் காயமும் என்னை வெகுவாக சோதித்தன. உடல் அளவிலும், மனதளவிலும் பல பாதிப்புகளை சந்தித்தேன். இருப்பினும் தடகள வீரர்களை காயம்தான் வலுவானவர்களாக மாற்றும் என்ற கருத்து, என்னுடைய வாழ்க்கையிலும் நடந்தேறியது. காயத்தினால் அவதிப்பட்ட நாட்களில், தோல்விக்கான காரணத்தை தேடினேன். முழுங்கால் சீரடைந்ததும், தவறுகளை திருத்திக்கொண்டு கடும்பயிற்சியில் இறங்கினேன். அதற்கான பரிசுதான், இந்த தங்கப்பதக்கம்’’ என்று உற்சாகமாக பேசும் வினேஷ், 2015-ம் ஆண்டு பலரது பழிப் பேச்சுகளுக்கு ஆளானவர். குறிப்பாக சீன வீராங்கனை யனன் சன்னிடம் தோற்று, உடல் காயத்தால் அவதிப்பட்ட காலங்களில், அவரது விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாக பலரும் புறம் பேசினார்கள். ஆனால் அவர்களது முகத்தில் கரியை பூசும்படி, தோற்ற வீராங்கனையிடமே வெற்றியை தேடி, இறுதி சுற்றுவரை போராடி தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

வினேஷ் அரியானா மாநிலத்திலுள்ள பலாலி பகுதியை சேர்ந்தவர். அவருக்கு 8 வயதாக இருந்தபோதே, அவரது தந்தை ராஜ்பால் இறந்துவிட்டார். மகளை மல்யுத்த வீராங்கனையாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமாக இருந்தது. அதை வினேஷின் உறவினரும், பிரபல மல்யுத்த வீரருமான மகாவீர் சிங் நிறைவேற்றியிருக்கிறார். இவர் வேறுயாரும் இல்லை, போகத் சகோதரிகளான கீதா போகத் மற்றும் பபிதா போகத்தின் தந்தை. இவர்களது மல்யுத்த வாழ்க்கையே ‘தங்கல்’ என்ற பாலிவுட் திரைப்படமாக வெளிவந்தது. அவரது பயிற்சியும், முயற்சியுமே வினேஷ் போகத்தை தங்க மங்கையாக ஜொலிக்க வைத்திருக்கிறது. அதுபற்றி வினேஷின் தாயார் பிரேமலதா சொல்கிறார்...

‘‘மகாவீர் சிங் இல்லையென்றால், வினேஷ் போகத் மல்யுத்த வீராங்கனையாக வளர்ந்திருக்கமாட்டாள். சொந்த மகள்களை வளர்ப்பது போன்றே வினேஷையும் வளர்த்தார். பொதுவாக தன்னுடைய பிள்ளைகளே சிறந்தவர்களாக விளங்கவேண்டும் என்பது அநேக பெற்றோரின் கருத்தாக இருக்கும். ஆனால் மகாவீர் சிங் தன்னுடைய மகள்களுக்கு போட்டியாகவே வினேஷையும் வளர்த்தார். மல்யுத்தம் சம்பந்தப்பட்ட எல்லா நுணுக்கங்களையும் வினேஷிற்கு சொல்லிக்கொடுத்தார். அவரை பொறுத்தமட்டில் வினேஷ் அவரது 5-வது மகள்’’ என்று பெருமிதப்படும் பிரேமலதா, வீட்டில் வினேஷை வேலை வாங்கினால், மகாவீரின் வசைப்பாடலை கேட்கவேண்டியிருக்கும் என்றும் கூறுகிறார்.

‘‘பள்ளி படிப்பின்போதே வினேஷ் முரட்டு சுபாவம் கொண்டவளாக இருந்தாள். சக மாணவர்களுடன் கடுமையாக சண்டை போடுவாள். அவர்களை அடித்து விடுவாள். ஒருமுறை வினேஷ் சண்டை போடுவது பற்றி ஆசிரியர்கள் மூலம் எங்கள் தந்தைக்கு புகார் வந்தது. அவரோ ஆண் பிள்ளைகளை விட அவள் தைரியசாலியாக இருப்பதாக பெருமிதத்துடன் கூறினார். தந்தை இறப்புக்கு பிறகு மகாவீர் சிங் எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார். தந்தை இல்லாத குறையை போக்கிவிட்டார்’’ என்கிறார், வினேஷின் சகோதரர் ஹர்விந்தர்.

வினேஷை போலவே அவருடைய உறவினர் களான கீதா, பபிதா, ரித்து ஆகியோரும் மல்யுத்தத்தில் சாதித்து கொண்டிருக்கிறார்கள். 2010, 2014, 2016-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார்கள். 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே வினேஷின் லட்சியமாக இருக்கிறது. அதற்காக மகாவீர் சிங் தன்னுடைய மகள்களுக்கு கடுமையாக பயிற்சியளித்து வருகிறார்.

Next Story