ஆசிய விளையாட்டு போட்டி ஆடவர் வில்வித்தையில் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் வில்வித்தையில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
இந்தோனேசியாவில் நடந்து வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆடவர் வில்வித்தை இறுதி போட்டி நடந்தது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் அமன் சைனி ஆகியோர் கொண்ட அணியினர் கொரிய அணியுடன் விளையாடினர்.
இதில் போட்டியின் இறுதியில் கொரிய அணி எடுத்திருந்த 9 என்ற புள்ளியானது ஆய்வுக்கு பின்10 என திருத்தப்பட்டது. இதனால் இரு அணிகளும் 229-229 என்ற புள்ளி கணக்கில் சமனில் இருந்தது.
இதனை தொடர்ந்து நடந்த ஷூட் ஆஃப் போட்டியில் கொரிய அணி முதலில், மையத்தினை மிக நெருங்கிய வகையில் 10 புள்ளிகளையும், பின்னர் 10, 9 ஆகிய புள்ளிகளையும் எடுத்திருந்தது. இந்திய அணி இரண்டு முறை 10 புள்ளிகள் மற்றும் 9 ஆகிய புள்ளிகளை எடுத்தது. இதனை தொடர்ந்து ஷூட் ஆஃப் முறையில் வெற்றி பெற்ற கொரிய அணி தங்கம் வென்றது. இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.