ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா


ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 23 Sep 2018 11:19 PM GMT (Updated: 23 Sep 2018 11:19 PM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

சென்னை,

சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர்கள் ஆரோக்ய ராஜீவ் 2 வெள்ளிப்பதக்கமும் (400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம்), தருண் 2 வெள்ளிப்பதக்கமும் (400 மீட்டர் தடை ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம்), ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா ஒரு வெள்ளி (பெண்கள் அணிகள் பிரிவு), ஒரு வெண்கலப்பதக்கமும் (பெண்கள் ஒற்றையர் பிரிவு), தீபிகா கார்த்திக் ஒரு வெள்ளி (பெண்கள் அணிகள் பிரிவு), ஒரு வெண்கலப்பதக்கமும் (பெண்கள் ஒற்றையர் பிரிவு), சுனய்னா குருவில்லா ஒரு வெள்ளிப்பதக்கமும் (பெண்கள் அணிகள் பிரிவு), டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 2 வெண்கலப்பதக்கமும் (கலப்பு இரட்டையர் பிரிவு, ஆண்கள் அணிகள் பிரிவு), ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் 2 வெண்கலப்பதக்கமும் (ஆண்கள் ஒற்றையர், அணிகள் பிரிவு) ஆக்கி வீரர்கள் ரூபிந்தர் பால்சிங், ஸ்ரீஜேஷ், பாய்மரபடகு வீரர்கள் வருண் அசோக் தக்கர், கணபதி, ஸ்குவாஷ் வீரர் ஹரிந்தர் பால் சந்து (ஆண்கள் அணிகள் பிரிவு) டேபிள் டென்னிஸ் வீரர்கள் அந்தோணி அமல்ராஜ், சத்யன் (இருவரும் ஆண்கள் அணிகள் பிரிவு), டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (ஆண்கள் ஒற்றையர்) ஆகியோர் தலா ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று அசத்திய தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு வீரர்-வீராங்கனைகளுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கி பாராட்டினார். ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, சுனய்னா குருவில்லா, ஸ்குவாஷ் வீரர் ஹரிந்தர் பால் சந்து ஆகியோர் நேரில் பரிசை பெற்றுக் கொண்டனர். ஆசிய விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றதால் மற்ற வீரர்கள் வரவில்லை. மற்ற வீரர்களின் சார்பில் அவர்களுடைய பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்ட விளையாட்டு சங்க மாநில நிர்வாகிகள் பரிசை பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் பெர்னாண்டோ, துணைத்தலைவர்கள் ஐசரி கே.கணேஷ், எஸ்.வாசுதேவன், எம்.ராமசுப்பிரமணி, டி.வி.சீத்தாராமராவ், தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், தமிழ்நாடு கபடி சங்க பொதுச்செயலாளர் ஷபியுல்லா, தமிழ்நாடு ஆக்கி அமைப்பின் தலைவர் சேகர் மனோகர், செயலாளர் ரேணுகா லட்சுமி, தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் பிரபு உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story