சாதிக்கும் சத்யன்!


சாதிக்கும் சத்யன்!
x
தினத்தந்தி 29 Sep 2018 6:13 AM GMT (Updated: 29 Sep 2018 6:13 AM GMT)

இந்தியாவின் ‘நம்பர் 1’ வீரராக உயர்வு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம், அர்ஜுனா விருது என்று தனது டேபிள் டென்னிஸ் வாழ்வில் புதிய உச்சங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறார், சத்யன் ஞானசேகரன்.

அர்ஜுனா விருது பெறத் தயாராகிக் கொண்டிருந்த சத்யனின் சுறுசுறு பேட்டி...

இப்போது... இந்தத் தருணத்தில் எப்படி இருக்கிறீர்கள்?

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் டேபிள் டென்னிஸ் விளையாடத் தொடங்கியபோது வைத்துக்கொண்ட இலக்குகள் இரண்டு. அதாவது, அர்ஜுனா விருது பெறுவதும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதும். தற்போது முதல் இலக்கை எட்டிவிட்டேன், அடுத்த இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

இதுவரையிலான உங்கள் டேபிள் டென்னிஸ் பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறபோது என்ன தோன்றுகிறது?

தற்போது எனக்கு 25 வயது ஆகிறது. 5 வயதில் டேபிள் டென்னிஸ் ஆடத் தொடங்கிய நான், இந்த இருபதாண்டு காலத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். இந்த நேரத்தில், எல்லாத் தருணங்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் நினைத்துக்கொள்கிறேன்.

உங்கள் டேபிள் டென்னிஸ் வாழ்வின் திருப்புமுனை என்று எதைக் கூறுவீர்கள்?


2008-ம் ஆண்டு காமன்வெல்த் இளையோர் போட்டியில் பதக்கம் வென்றதும், 2016-ம் ஆண்டு பெல்ஜியம் ஓபனில் ஒற்றையர் பட்டம் வென்றதும். நான் பெற்ற முதல் தொழில்முறைப் பட்டம் என்ற வகையில், பெல்ஜியன் ஓபன் வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்த ஆண்டும் உங்களுக்கு நல்லவிதமாக அமைந்திருக்கிறது...

ஆமாம். காமன்வெல்த் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினேன். ஆசிய விளையாட்டில் நான், சரத் கமல், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி, அந்தோணி அமல்ராஜ் அடங்கிய இந்திய அணி, வெண்கலப் பதக்கம் வென்று வந்தோம். ஆசிய போட்டி 60 ஆண்டுகால டேபிள் டென்னிஸ் வரலாற்றில் நாம் பெற்றிருக்கும் முதல் பதக்கம் இது. உலக டேபிள் டென்னிஸ் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, ஜப்பான், தென்கொரியா, சீன தைபே, சிங்கப்பூர் ஆகியவை ஆசிய அணிகள்தான். அவர்களுடன் மோதி நாங்கள் இந்தப் பதக்கம் வென்றிருக்கிறோம் என்றால், இந்தச் சாதனையின் உயரம் புரியும். அரையிறுதியில் எங்களைவிட தரநிலையில் உயர்ந்த ஜப்பானை வீழ்த்தியது பெரிய விஷயம். சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில் நான் 49-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறேன். இவற்றால் எல்லாம், இந்த வருடம் எனக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது.

அடுத்த இலக்கு ஒலிம்பிக்தானா?

ஆமாம். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நோக்கியே தற்போது என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆசிய விளையாட்டில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்துக்கு மோதும் ஜப்பானை வீழ்த்தியிருப்பது எனக்கு புதுத் தெம்பையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிக்காக நீங்கள் உங்களை எப்படித் தயார்ப்படுத்திக் கொள்கிறீர்கள்?

ஒலிம்பிக் போன்ற உச்ச போட்டிகளில் வெல்வதற்கு, உலகின் முன்னணி வீரர்களுடன் பயிற்சி பெற வேண்டும், அவர்களுடன் அடிக்கடி மோத வேண்டும். அதை மனதில் வைத்து நானும் எனது பயிற்சியாளர் ராமனும் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஜெர்மனியின் பிரசித்தி பெற்ற பண்டஸ்லிகா டாப் டிவிஷன் லீக் போட்டியில் அந்நாட்டின் முன்னணி கிளப்பான கிரன்வெட்டர்ஸ்பாக் சார்பில் விளையாடி வரும் நான், தொடர்ந்து, ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற முடிவெடுத் திருக்கிறேன். சீன வீரர்களை நம்மூருக்கு வரவழைத்துப் பயிற்சி பெறும் திட்டமும் இருக்கிறது.

சர்வதேச அளவில் வீரர் களுக்கு இடையிலான மிக மெல்லிய கோடாக உள்ள வேறுபாடு எது?

நீங்கள் சொல்வது போல், உலக அரங்கில் மோதும் வீரர்களுக்கு இடையிலான வேறுபாடு மிகக் குறைவாக இருக்கும். திறமை விஷயத்தில் ஏறக்குறைய எல்லோரும் ஒரே அளவில் இருப்பார்கள். அதையும் தாண்டி, மிக நுணுக்கமான சில விஷயங்கள், மன உறுதி போன்றவைதான் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. எனவே நான் அதிலும் கவனம் செலுத்துகிறேன். விளையாட்டுத் திறனை வளர்த்துக்கொண்டு வரும் அதேநேரம், மனப்பயிற்சி யாளர்களின் உதவியுடன் மனப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

ஒலிம்பிக்கை நோக்கிய உங்கள் பயணத்துக்கான ஆதரவு எப்படி உள்ளது?

நன்றாகவே உள்ளது. தமிழக அரசும், எனது ஸ்பான்சர்களான கோஸ்போர்ட்ஸ், ஓ.என்.ஜி.சி. ஆகியவையும் உறுதுணையாக உள்ளன. ஒலிம்பிக் வெற்றி மேடைக்கான இந்திய விளையாட்டு ஆணையத்தின் திட்டமான ‘டாப்ஸ்’சிலும் நான் இடம்பெற்றிருக் கிறேன். ஆனால் நவீன விளையாட்டு உலகம் என்பது அதிக வளமும் வசதியும் தேவைப்படுவது. வெளிநாடுகளில் தங்கிப் பயிற்சி செய்வதற்கு அதிக நிதி ஆதாரம் தேவை. எனவே, ஸ்பான்சர் உதவி இன்னும் அதிகம் வேண்டும்.

இந்திய டேபிள் டென்னிசில் தமிழகத்தின் பங்கு அதிகமாக இருக் கிறதே?

ஆமாம். நாட்டுக்கு தொடர்ந்து சிறந்த டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளை உருவாக்கிக் கொடுக்கும் பட்டறையாக தமிழகம் திகழ்கிறது. நான், சரத் கமல், அமல்ராஜ் ஆகியோர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறோம். ஒரு சென்னைப் பையனாக நான் இது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

டேபிள் டென்னிசில் இன்றைய இளந்தலைமுறையின் ஆர்வம் எவ்வாறு இருக்கிறது?


மிகவும் நன்றாக இருக்கிறது. எண்ணற்றோர் இந்த விளையாட்டை நோக்கி ஆர்வத்துடன் வந்துகொண்டிருக்கிறார்கள். பல போட்டித்தொடர்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் நாம் இன்னும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சாதாரண அரங்கில் விளையாடுவதற்கும், குளிர்சாதன அரங்கில் விளையாடுவதற்குமே நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுடன் ஒப்பிடும்போது, வீராங்கனைகள் கொஞ்சம் பின்தங்கியிருக் கிறார்களா?

அதற்குக் காரணம், வெளிநாட்டுப் போட்டிகள், கிளப்களில் ஆடுவதற்கான வாய்ப்பு நம் வீராங்கனைகளுக்கு குறைவாகக் கிட்டுவதுதான். அந்த நிலை மாறினால் நம் பெண்களும் முன்னேற்றம் காணுவார்கள். இன்று இந்தியாவின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனையாக மணிகா பத்ரா திகழ்கிறார். அவர் காமன்வெல்த் போட்டியில் சாதித்ததுடன், இந்த ஆசிய விளையாட்டிலும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றிருக் கிறாரே?

யாருடைய உறுதுணை இல்லாவிட்டால் உங்களால் ஒரு சர்வதேச வீரராக உயர்ந்திருக்க முடியாது?

நிச்சயமாக எங்கப்பாதான். என்னைப் பற்றியும், என் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் பற்றியுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தவர் அவர். அப்பாவின் மறைவு, எனக்கு ஒரு பெரும் பின்னடைவு. அதிலிருந்து மீளவே எனக்கு சில காலம் பிடித்தது. தற்போது எனது அம்மா, சகோதரிகளும் எனக்குப் பின்புலமாக உள்ளனர். எனக்கு ஆரம்பத்தில் பயிற்சி அளித்த சந்திரசேகர், தற்போது பயிற்சி அளிக்கும் ராமன் ஆகியோருக்கும், எனது ஸ்பான்சர்களுக்கும் என்னுடைய வளர்ச்சியில் பிரதான பங்கு இருக்கிறது.

உலகின் ‘டாப்- 10’ வீரர்களில் ஒருவராக வேண்டும், ஒலிம்பிக்கில் வெல்ல வேண்டும் என்ற இலக்குகளை வைத்திருக்கிற சத்யன் ஞானசேகரன், அவற்றைச் சாதிப்பார் என்பதில் சந்தேகமில்லை!

‘துரோணாச்சாரியா’ சீனிவாச ராவ்

தமிழகத்தில் இருந்து டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்காக தேசிய விருது கவுரவம் பெறும் மற்றொருவர், சீனிவாச ராவ். இவர் விருது பெறுவது டேபிள்
டென்னிஸ் பயிற்சிக்காக. பெறும் விருது, ‘துரோணாச்சாரியா’. பிரபல வீரர் சரத் கமலின் தந்தையான சீனிவாச ராவ், தனது சகோதரர் முரளிதர ராவுடன் இணைந்து பல தேசிய, சர்வதேச சாம்பியன்களை உருவாக்கியிருக்கிறார், உருவாக்கி வருகிறார். இவருக்கு உரிய அங்கீகாரமாக 64 வயதில் துரோணாச்சாரியா விருது அளிக்கப்பட்டிருக்கிறது. ‘‘நாட்டுக்காக உலக அரங்கில் வெல்லும் வீரர், வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்று நான் பயிற்சி அளிக்கத் தொடங்கியபோது நினைத்தேன். அதை வெற்றி கரமாக நிறைவேற்றியிருக்கிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவை நனவாக்கும் முயற்சியில் நான் தொடர்ந்து சாம்பியன்களை உருவாக்குவேன்’’ என்கிறார், சீனிவாச ராவ். 

Next Story