புரோ கபடி லீக் சென்னையில் இன்று தொடக்கம்


புரோ கபடி லீக் சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 6 Oct 2018 11:15 PM GMT (Updated: 6 Oct 2018 7:46 PM GMT)

புரோ கபடி லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பாட்னா அணிகள் மோத உள்ளன.

சென்னை,

புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதன் அறிமுக போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், 2015-ம் ஆண்டில் மும்பை அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. பாட்னா பைரட்ஸ் அணி தொடர்ச்சியாக 3 முறை (2016 ஜனவரி, 2016 ஜூன், 2017) சாம்பியன் பட்டம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது.

இந்த நிலையில் மொத்தம் ரூ.8 கோடி பரிசுத் தொகைக்கான 6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. சென்னை சுற்று ஆட்டங்கள் வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை அடுத்து சோனிபட், புனே, டெல்லி, கொல்கத்தா உள்பட 10 இடங்களில் போட்டி அரங்கேறுகிறது. இதில் பங்கேற்கும் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு தலா 22 லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

சென்னையில் இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பர்தீப் நார்வால் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஆண்டு இந்த போட்டியில் முதல்முறையாக களம் கண்டது. 22 லீக் ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 6 வெற்றி, 14 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் கடைசி இடத்தை பெற்றது. உள்ளூரில் நடந்த 6 ஆட்டங்களிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி கண்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஒட்டுமொத்தமாக 222 புள்ளிகள் குவித்தாலும், அவருக்கு பக்கபலமாக மற்ற வீரர்கள் யாரும் செயல்படவில்லை. இந்த முறை தமிழ் தலைவாஸ் அணியில் அனுபவமும், திறமையும் வாய்ந்த மன்ஜீத் ஷிலார், ஜஸ்விர்சிங், அமித் ஹூடா, தர்ஷன் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளதால் அணி வலுப்பெற்றுள்ளது.

நடப்பு சாம்பியனும், தொடர்ந்து 3 முறை கோப்பையை வென்று சாதித்த பாட்னா பைரட்ஸ் அணியில் பர்தீப் நார்வால், தீபக் நார்வால், ஜெய்தீப், ஜவகர், விகாஸ் காலே உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். உள்ளூரில் வெற்றியுடன் போட்டியை தொடங்க தமிழ் தலைவாஸ் அணி முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் நடப்பு சாம்பியனுக்குரிய கம்பீரத்தை வெளிப்படுத்த பாட்னா பைரட்ஸ் அணி எல்லா வகையிலும் முயலும். வலுவான இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதே மைதானத்தில் இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் மும்பை-புனேரி பால்டன் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டி தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Next Story