சென்னையில் புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி


சென்னையில் புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி
x
தினத்தந்தி 8 Oct 2018 11:15 PM GMT (Updated: 8 Oct 2018 9:11 PM GMT)

சென்னையில் நடந்த புரோ கபடி லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.

சென்னை,

புரோ கபடி லீக் போட்டி தொடரில் சென்னையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 32-37 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவிடம் தோல்வி கண்டது.

6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த கபடி திருவிழாவில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டியின் 2-வது நாளான நேற்று இரவு 9 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-உ.பி.யோத்தா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டம் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை. 2-வது ரைடில் ஜஸ்விர் சிங் எதிரணி வீரரை தொட முயற்சிக்கையில் நிலை தடுமாறி பக்கவாட்டு எல்லைக்கோட்டில் மிதித்து ஆட்டம் இழந்தார். அது முதல் உ.பி.யோத்தா அணி புள்ளிகள் எடுத்த வண்ணம் இருந்தது. தமிழ் தலைவாஸ் அணியை முதலாவது ‘ஆல்-அவுட்’ செய்த உ.பி.யோத்தா அணி ஒரு கட்டத்தில் 12-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. அதன் பிறகு தான் தமிழ் தலைவாஸ் அணி புள்ளி கணக்கை தொடங்கியது. முதல் பாதியில் உ.பி.யோத்தா அணி 18-4 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

பின் பாதி ஆட்டம் தொடங்கியதும் 2-வது முறையாக ‘ஆல்-அவுட்’ ஆன தமிழ் தலைவாஸ் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டது. மாற்று ஆட்டக்காரர் அதுல் ரைடு மூலம் தமிழ் தலைவாஸ் அணி ஒன்றிரண்டு புள்ளிகளை சேர்த்தது. அத்துடன் உ.பி.யோத்தா அணியை முதல்முறையாக ஆல்-அவுட்டும் செய்தது. கடைசி கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஆட்டம் எடுபட்டாலும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை. முடிவில் உ.பி.யோத்தா அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை சாய்த்து வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி இருந்த தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

முன்னதாக நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 34-22 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் தபாங் டெல்லி- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story