கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் கவுரவம், கபடி வீரர்களுக்கும் கிடைக்கிறது -ராகுல் சவுத்ரி


கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் கவுரவம், கபடி வீரர்களுக்கும் கிடைக்கிறது -ராகுல் சவுத்ரி
x
தினத்தந்தி 20 Oct 2018 9:21 AM GMT (Updated: 20 Oct 2018 9:21 AM GMT)

6-வது சீசனாக சென்னையில் அரங்கேறி வரும் புரோ கபடி ஆட்டங்களில், அதிரடிக்கு பஞ்சமே இல்லை. ஏனெனில் முந்தைய சீசன் போட்டிகளில் கிடைத்த தோல்வி ஏமாற்றங்களுக்கு, இந்த சீசன் ஆட்டங்களின் மூலம் பழிக்கு பழி வாங்க, பல அணிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த கோதாவில், ‘தெலுங்கு டைட்டன்ஸ்’ அணியின் அதிரடி ரைடர் ராகுல் சவுத்ரியும் முனைப்பு காட்டுகிறார்.

ஆம்..! கடந்த சீசன்களில் ‘தெலுங்கு டைட்டன்ஸ்’ அணியை வீழ்த்திய அணிகளை எல்லாம், இந்த சீசனில் பந்தாட இருக்கிறாராம் ராகுல் சவுத்ரி. அதற்காக பிரத்யேகமாக தயாராகி வரும் ராகுல் சவுத்ரியை விறு விறுப்பான கேள்விகளுடன் சந்தித்தோம். ‘கபடி ரைடில்’ இருக்கும் வேகம், ராகுலின் பதில்களிலும் வெளிப்பட்டது.

தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கும், உங்களுக்குமான பந்தத்தை பற்றி கூறுங்கள்?

இது புரோ கபடியின் ஆறாவது சீசன். நான் முதல் சீசனில் இருந்து இன்று வரை தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறேன். எனக்கு மற்ற அணிகளில் இருந்து பல வழிகளில் அழைப்பு வந்தாலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியிலேயே நீடிக்கிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, சாதாரண கபடி வீரனான என்னை, சிறந்த கபடி ரைடராக மாற்றிய பெருமை தெலுங்கு டைட்டன்ஸ் அணியையே சேரும்.

புரோ கபடியின் முதலாவது சீசன் ஏலத்தில் பெரும்பாலான அணிகள், அனுபவமிக்க வீரர்களை நம்பி ஏலம் எடுத்துக்கொண்டிருக்க, தெலுங்கு டைட்டன்ஸ் அணியே இளம் வீரரான எனக்கு மதிப்பும், மரியாதையும் கொடுத்தது. இப்படி என்னை வளர்த்த பாசம் ஒருபுறமிருக்க, என் அணியை தோற்கடித்தவர்களை பழிக்கு பழி வாங்கும் பகை உணர்வும் எனக்குள் இருக்கிறது. அதனால்தான் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிலேயே தொடர ஆசைப்படுகிறேன்.

புரோ கபடியின் பெரும்பாலான சீசன்களில் நீங்கள் அதிக புள்ளிகளை தட்டிப்பறித்தும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் வெற்றிபெற முடியவில்லையே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு கபடி அணியில் சிறந்த ரைடர்கள் இருந்தால் மட்டும் போதாது. டிபண்டர்கள் எனப்படும் தலைச்சிறந்த தடுப்பாட்டக்காரர்களும் தேவை. நம்முடைய எல்லைக்கோட்டிற்குள் கபடி கானம் பாடி வரும் எதிரணி வீரரை, சாதுரியமாக மடக்கி பிடிக்கும் திறன் படைத்த, டிபண்டர்கள் இருந்தால் மட்டுமே கபடி ஆட்டத்தில் வெற்றி பெற முடியும். இந்த யுக்தியை சரிவர பயன்படுத்த தவறியதால், புள்ளிகளை தட்டிப்பறித்தும், வெற்றி கனியை எட்டிப் பறிக்க முடியவில்லை.

இந்த சீசனில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பலம்-பலவீனம் என்ன?

பழைய அணிகளிலிருந்து வீரர்கள் விடுவிக்கப்பட்டு, புதிய ஏலத்தின் மூலம் வீரர்கள் புதுப்புது அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால் பலம் வாய்ந்த அணிகள், பலமில்லாத அணிகளாக காட்சியளிக்கின்றன. அதேசமயம் இதுநாள் வரை பலமில்லாத அணிகளாக தோன்றியவை, இப்போது பலமிக்க அணியாக மாறிவிட்டன. அதனால் இதுநாள் வரை சாம்பியன் பட்டத்தை வெல்ல துடிக்கும், தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு இந்த சீசன் நல்ல வாய்ப்பாக அமையும்.

இந்த சீசனுக்காக நடந்தப்பட்ட வீரர் ஏலத்தில் நீங்கள் இரண்டாவது பெரிய தொகைக்கு ஏலம் போனீர்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வீரர்களுக்கான ஏலப்போட்டி நடந்தபோது நான் அங்கிருந்ததால், எனக்காக நடத்தப்பட்ட ஏலப்போட்டியை கண்குளிர காணமுடிந்தது. அன்றுதான் என்னுடைய மதிப்பையும், விளையாட்டு திறமையையும் உணர முடிந்தது. ஏலத்தொகை 1 கோடியை நெருங்கியபோது, எனக்குள் வெளிப்பட்ட சந்தோஷ உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் சிரித்தவாறு, கண்கலங்கிவிட்டேன். பிற அணிகள் என்னை வளைத்துபோட கோடி ரூபாயை நிர்ணயித்தாலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் என்னை விடுவதாக இல்லை. அதனால்தான் ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் செலுத்தி, என்னை தக்க வைத்துக்கொண்டனர்.

கபடி விளையாட்டின் மூலம் கிடைத்த மறக்க முடியாத தருணங்களை கூறுங்கள்?

இந்த கேள்விக்கான பதிலாக, 2006-ம் ஆண்டுகளில் நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன். அந்த காலகட்டத்தில் கபடி விளையாடு வதற்காக மட்டுமே, நான் பள்ளிக்கு சென்று வருவேன். மற்றபடி தேர்வுகள், பாட வகுப்புகள் என்றால் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்துவிடுவேன். இப்படியே காலங்கள் நகர்ந்தன. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை தவறவிட்டதால், முழு ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப் படவில்லை. அதை நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விஷயம் என்னுடைய பெற்றோரின் காதுகளுக்கு சென்றுவிட்டது. என்னை வெளுத்து வாங்க பெற்றோர் தேடி அலைந்து கொண்டிருந்தனர். அந்தசமயம் நான் ஊரில் நடைபெற்ற கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தேன். கடைசி இரண்டு ரைடுகள் மிச்சம் இருந்தன. அதில் நான்கு புள்ளிகளை தட்டி வந்தால் வெற்றி கோப்பை என்ற நிலையில், ரைடிற்கு தயாராகி கொண்டிருந்த என்னை, அப்பா மடக்கி பிடித்துவிட்டார். அதோடு வீட்டிற்கும் இழுத்து சென்றுவிட்டார். என்னுடைய அணி, என்னையே பெரிதும் நம்பி இருந்ததால் கோப்பையும் நழுவிவிட்டது. அதேசமயம் எனக்கும் வீட்டில் ‘செம ரைடு’ கிடைத்தது.

தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை நிராகரிப்பது பற்றி?

கேப்டன் பொறுப்பு என்றாலே, தலைவலி என்று அர்த்தம். அதனால்தான் கேப்டன் பொறுப்பை நிராகரித்து வருகிறேன். இருப்பினும் தலைவலியை என் தலையிலேயே கட்டிவிடு கிறார்கள்.

எல்லா ஆட்டங்களிலும் புள்ளிகளை அள்ளிவந்துவிடுகிறீர்களே. அது எப்படி சாத்தியமாகிறது?

ரைடர்களின் திறமையே, எதிரணி வீரர்களின் தவறுகளை கவனிப்பதுதான். யார் மெதுவாக நகர்கிறார்கள்?, யாரை வேகமாக தொட முடியும்?, எல்லைக்கோடு எங்கே இருக்கிறது?, எல்லைக்கோட்டிற்கு அருகே எதிரணி வீரர்களை எப்படி வரவழைக்கலாம் போன்ற விஷயங்களை சரியான முறையில் கணித்துவிட்டால், ரைடுகளில் அதிக புள்ளிகளை அள்ளிவரலாம். அதேசமயம் வேகமாகவும் இருக்கவேண்டும், விவேகமாகவும் இருக்கவேண்டும். இல்லையேல், நாம் எதிரணியினரின் இலக்காகிவிடுவோம். மேலும் என்னுடைய மூளை கபடி ஆடுகளத்தின் எல்லைக்கோடுகளை வரைப்படமாக சேமித்து வைத்துக்கொள்ளும். அதனால் நான் எங்கு நிற்கிறேன், எனக்கும் எல்லைக்கோட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது?, எதிரணியினரை தொட, இன்னும் உள்ளே செல்லலாமா..? போன்ற விஷயங்களை கணித்து, விளையாடமுடிகிறது.

உங்களுக்கு பிடித்த தமிழக கபடி வீரர் யார்? ஏன்?

எனக்கு பிரபஞ்சன் விளையாடும் ஸ்டைல் பிடித்திருக்கிறது. அவர் உயரமானவர், அதேசமயம் ரைடு செல்கையில் எச்சரிக்கையாக செயல்படக்கூடியவர். எதிரணியினரின் எல்லைக்கோட்டிற்குள் வந்துவிட்டால், அவரது கால்கள் ஒரு இடத்தில் நிற்காது. அங்கும் இங்கும் பரபரப்பாக சிறகடித்துக்கொண்டே இருக்கும். துடிப்பான ஆட்டம்தான், அவரது பலம்.

புரோ கபடி போட்டிகள், இந்தியாவில் கபடி விளையாட்டுகளை வளர்த்திருக்கிறதா?

நிச்சயமாக..! எல்லா மாநிலங்களிலும் கபடியை விளையாட ஆரம்பித்துவிட்டனர். கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் கவுரவம் கபடிக்கும், எங்களுக்கும் கிடைக்கிறது. இந்த சீசனில் நடந்த ஏலத்தில் பல வீரர்கள் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வாங்கப்பட்டுள்ளனர். நிறைய நிறுவனங்கள் கபடி விளையாட்டிற்கு ஸ்பான்சர்ஷிப் கொடுக்கின்றன. இதற்குமேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்...?. கபடிக்கும், கபடி வீரர்களுக்கும் அதிர்ஷ்டக்காற்று வீச ஆரம்பித்துவிட்டது என்ற கருத்தோடு விடைப்பெறுகிறேன்.

Next Story