டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 20 Oct 2018 10:30 PM GMT (Updated: 20 Oct 2018 9:32 PM GMT)

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அரைஇறுதியில் இந்தோனேஷியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை 21-11, 21-12 என்ற நேர்செட்டில் எதிராளியை மிரள வைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் சக நாட்டு வீரர் சமீர் வர்மாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் நேற்று நம்பர் ஒன் வீரரான கென்டோ மொமோட்டோவை (ஜப்பான்) எதிர்கொண்டார். 42 நிமிடம் நடந்த இந்த அரைஇறுதி மோதலில் ஸ்ரீகாந்த் 16-21, 12-21 என்ற நேர்செட்டில் மொமோட்டோவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதியின் முன்னாள் உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அரைஇறுதியில் இந்தோனேஷியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை சந்தித்தார். இதில் சாய்னா 21-11, 21-12 என்ற நேர்செட்டில் எதிராளியை மிரள வைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சாய்னாவுக்கு 30 நிமிடமே தேவைப்பட்டது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான தாய் ஜூ யிங்கை (சீனதைபே) எதிர்கொள்கிறார். இருவரும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் தாய் ஜூ யிங் 12 முறையும், சாய்னா 5 தடவையும் வெற்றி கண்டுள்ளனர். தாய் ஷூ யிங்குக்கு எதிரான கடைசி 10 ஆட்டங்களில் ஒன்றில் கூட சாய்னா வெற்றியை பெற்றதில்லை. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story