துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 28 Oct 2018 9:00 PM GMT (Updated: 28 Oct 2018 8:31 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளுக்கு பிறகு பீகார் அணி இந்த சீசனில் பங்கேற்கிறது. இதற்கான பீகார் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘கவுகாத்தி, விசாகப்பட்டினம், புனே ஆகிய மூன்று இடங்களில் நடந்த ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அற்புதமான ரன் குவிக்கும் எந்திரமாக கோலி திகழ்கிறார். சர்வதேச அரங்கில் அவர் 120 சதங்களுக்கு மேல் அடிப்பார் என்பது எனது கணக்கு’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த சர்வதேச போட்டியில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) கோலி இதுவரை 62 சதங்கள் எடுத்துள்ளார்.

* சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் சாய் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மத்திய கலால்வரி அணியை வீழ்த்தியது. சாய் அணியில் யோகேஷ்வரன், வீரதமிழன் கோல் போட்டனர். ஐ.ஓ.பி.-இந்தியன் வங்கி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்றைய ஆட்டத்தில் ஐ.சி.எப்.-தெற்குரெயில்வே (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.

* வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல், கடந்த 2013-ம் ஆண்டு நடந்த வங்காளதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 5 ஆண்டுகள் தடை விதித்தது. அந்த தடை கடந்த ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது. மறுபடியும் வங்காளதேச அணிக்காக ஆட முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ள 34 வயதான அஷ்ரபுல், ஜனவரி மாதம் தொடங்கும் வங்காளதேச பிரிமீயர் லீக்கில் கால்பதிக்கிறார். அவர் சிட்டகாங் வைக்கிங்ஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளார்.

* ரஞ்சி கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளுக்கு பிறகு பீகார் அணி இந்த சீசனில் பங்கேற்கிறது. இதற்கான பீகார் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டு இருக்கிறார். பீகார் அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 1-ந்தேதி உத்தரகாண்டை எதிர்கொள்கிறது.

* மும்பை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி மும்பையில் உள்ள சி.சி.ஐ. மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி நேற்று நடந்தது. தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய வீராங்கனை பிரஞ்சலா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஒக்சனாவை (ஜார்ஜியா) தோற்கடித்து பிரதான சுற்றை எட்டினார். ஆந்திராவைச் சேர்ந்த 19 வயதான பிரஞ்சலா டபிள்யூ.டி.ஏ. போட்டியில் ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும். அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர் தாண்டி, ருதுஜா போசலே ஆகிய இந்திய மங்கைகளும் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். பிரதான சுற்று போட்டி இன்று தொடங்குவதாக இருந்தது. இதே இடத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் போட்டி இன்று நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு டென்னிஸ் போட்டி ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* வியன்னா ஓபன் கோப்பையை வென்றதன் மூலம் தென்ஆப்பிரிக்க டென்னிஸ் வீரர் கெவின் ஆண்டர்சன், அடுத்த மாதம் 8-ந்தேதி தொடங்கும் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 1995-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் தென்ஆப்பிரிக்க வீரர் என்ற சிறப்பை ஆண்டர்சன் பெற்றார்.

* டெல்லியில் நடந்த பனாசோனிக் ஓபன் கோல்ப் போட்டியில் சாதுர்யமாக செயல்பட்ட இந்திய வீரர் காலின் ஜோஷி நேற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். ஆசியன் டூர் அந்தஸ்து பெற்ற போட்டியில் அவர் பட்டம் வெல்வது இதுவே முறையாகும். அவருக்கு ரூ.52 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. பெங்களூருவைச் சேர்ந்த 26 வயதான ஜோஷி, மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று கூறி உணர்ச்சி வசப்பட்டார்.


Next Story