து ளி க ள்


து ளி க ள்
x
தினத்தந்தி 10 Nov 2018 9:00 PM GMT (Updated: 10 Nov 2018 8:55 PM GMT)

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் இன்று நடக்கிறது.

நியூசிலாந்து-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பந்து தாக்கியதால் வெளியேறும் பாகிஸ்தான் வீரர் இமாம் உல்-ஹக்.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே, ஒருநாள் போட்டித் தொடரை வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. 2-வது ஆட்டத்தின் போது ‘பவுன்சர்’ பந்து ஹெல்மெட்டில் தாக்கியதில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் நிலைகுலைந்து சரிந்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் காயம் கவலைப்படும் வகையில் இல்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா?

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் இன்று நடக்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்ல முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுகட்டும் என்பதில் சந்தேகமில்லை. காலை 8.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

தமிழக வீரர் பஹத் முகமது ‘சாம்பியன்’

அகில இந்திய டென்னிஸ் சங்க ரேங்கிங் டென்னிஸ் போட்டி மும்பையில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழக வீரர் பஹத் முகமது 6-4, 6-2 என்ற நேர்செட்டில் புனே வீரர் அதர்வா சர்மாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மல்யுத்த தரவரிசையில் பஜ்ரங் பூனியா முதலிடம்

சமீபத்தில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் உலக மல்யுத்த பெடரேஷன் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப்பட்டியலில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா (96 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பிரிவில் முதலிடத்தை பெற்ற முதல் இந்தியர் பூனியா தான். 24 வயதான பூனியா காமன்வெல்த், ஆசிய விளையாட்டின் சாம்பியன் ஆவார். கியூபா வீரர் அலெக்சாண்ட்ரோ என்ரிக் 66 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.

கால்பந்து: கொல்கத்தாவிடம் வீழ்ந்தது புனே

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. கொல்கத்தா வீரர் கெர்சன் வியரா 82-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

Next Story