உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் மனிஷா, சரிதா தேவி வெற்றி


உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் மனிஷா, சரிதா தேவி வெற்றி
x
தினத்தந்தி 16 Nov 2018 11:15 PM GMT (Updated: 16 Nov 2018 7:51 PM GMT)

உலக குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் மனிஷா, சரிதா தேவி ஆகியோர் வெற்றிபெற்றனர்.

புதுடெல்லி,

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 54 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மனிஷா மோன், உலக போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா கிரஸ்சை சந்தித்தார். உலக போட்டியில் முதல்முறையாக களம் கண்ட அரியானாவை சேர்ந்த 20 வயதான மனிஷா மோன், 36 வயதான கிறிஸ்டினா கிரஸ்சை தொடக்கம் முதலே மிரள வைத்தார். சரமாரியாக குத்துகளை விட்ட மனிஷா மோன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார். அடுத்த சுற்றில் மனிஷா மோன், உலக சாம்பியனான டினா ஜோலாமன்னை (கஜகஸ்தான்) எதிர்கொள்கிறார். இதே போல் 60 கிலோ பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த முன்னாள் சாம்பியனான இந்திய வீராங்கனை சரிதா தேவி 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தின் டியானா சான்ட்ரா புருஜெரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

வெற்றிக்கு பிறகு மனிஷா மோன் கூறுகையில், ‘உலக குத்துச்சண்டையில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று இருப்பதை நினைத்து பெருமிதம் அடைகிறேன். அடுத்த சுற்று போட்டிகளிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். அடுத்த சுற்றில் நான் உலக சாம்பியனை சந்திக்கிறேன். அவரை போலந்தில் நடந்த சர்வதேச போட்டியில் வென்று இருக்கிறேன். அவருக்கு எதிரான போட்டி கடினமாக இருக்கும். இருப்பினும் என்னால் அவரை வீழ்த்த முடியும்’ என்றார்.


Next Story