துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 28 Nov 2018 9:15 PM GMT (Updated: 28 Nov 2018 7:10 PM GMT)

10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

* இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் ஏற்கனவே ஒரு பதக்கம் (2012-ம் ஆண்டில் வெண்கலம்) பெற்றுள்ளேன். அடுத்து 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக இரண்டு, மூன்று மடங்கு மிக கடினமாக பயிற்சி மேற்கொள்வேன்’ என்றார்.

* 10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. மொத்தம் 48 ஆட்டங்கள் இடம் பெறுகிறது. இதில் பெரும்பாலான ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. குறிப்பாக இந்திய அணிக்குரிய அனைத்து ஆட்டங்களின் டிக்கெட்டுகளும் விற்று விட்டதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். ஏறக்குறைய 3,500 டிக்கெட்டுகள் மட்டுமே இன்னும் எஞ்சியிருப்பதாகவும், எப்போதும் இல்லாத அளவுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

* டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே களம் காணும் உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சீனாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு 3-வது முறையாக தகுதி பெற்றுள்ள தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய மங்கை பி.வி.சிந்து அளித்த பேட்டியில், ‘இந்த முறை நான் நல்ல பார்மில் இருப்பேன். ஏனெனில் போட்டிக்கு தயாராவதற்கு போதுமான கால அவகாசம் எனக்கு கிடைத்துள்ளது. பேட்மிண்டனில் மிகப்பெரிய போட்டிகளில் இதுவும் ஒன்று. இந்த தொடர் மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே மகுடம் சூட விரும்புகிறேன். இந்த முறை நன்றாக ஆடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். ஆண்கள் பிரிவில் இந்திய தரப்பில் சமீர் வர்மா மட்டும் இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்.

* கொரியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவில் உள்ள வாங்ஜூ நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 55-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் காஷ்யப் 17-21, 21-13, 8-21 என்ற செட் கணக்கில் 22-ம் நிலை வீரரான தென்கொரியாவின் லீ டோங் கென்னிடம் தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 50-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சவுரப் வர்மா 13-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் 108-ம் நிலை வீரரான ஹெய்னோவிடம் (பின்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். இதன் மூலம் இந்த போட்டி தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

* இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அதை ஒதுக்கி வைத்து விட்டு, இப்போது உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன். தற்போது சிறிது காலம் ஓய்வு கிடைத்திருப்பதால் தொடர்ந்து உடல்பயிற்சி மேற்கொண்டு இன்னும் என்னை வலுப்படுத்திக் கொள்வேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளது. அதற்கு பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மற்றும் கேட்ச் செய்தல் ஆகியவற்றில் நாம் முழுமையான அணியாக செயல்பட வேண்டியது அவசியமாகும். உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளேன். இங்கிலாந்தில் இரண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான் நன்றாக ஆடியிருக்கிறேன். அதனால் அங்கு நடக்கும் உலக கோப்பை போட்டியிலும் நிறைய ரன்கள் குவிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.


Next Story