து ளி க ள்


து ளி க ள்
x
தினத்தந்தி 5 Dec 2018 9:00 PM GMT (Updated: 5 Dec 2018 8:30 PM GMT)

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி தொடங்குகிறது.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரையான் ஹாரிஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதே போல் பீல்டிங் பயிற்சியாளராக நியூசிலாந்தின் கிரேக் மெக்மில்லன், பேட்டிங் பயிற்சியாளராக இந்தியாவின் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு நடக்கிறது. இந்த போட்டிக்கு தென்ஆப்பிரிக்க பெண்கள் கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கான பெண்கள் கால்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி கண்டது. உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற தென்ஆப்பிரிக்க வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சத்தை போனசாக அந்த நாட்டு கால்பந்து சங்கம் வழங்கி உள்ளது.

* கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் அமெரிக்க முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பங்கேற்க இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஓபன் போட்டியின் இறுதி சுற்றில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவிடம் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் அந்த ஆட்டத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு எந்த போட்டியிலும் அவர் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயத்தால் ஓய்வில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோரும் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.

* சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். டோக்கியோவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க இருக்கும் மேரிகோம் மும்பையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘பயிற்சியின் போது என்னுடன் மோத சரியான பார்ட்னர் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இங்கு சரியான பார்ட்னர் இதுவரை கிடைக்கவில்லை. எனக்கு பயிற்சி சரியாக அமையவில்லை என்றால் ஆண்கள் அல்லது உயரமான பெண்களுடன் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு உயரமானவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டேன். அதே பாணியில் இந்த முறையும் பயிற்சி மேற்கொள்வேன்’ என்றார்.

* 5-வது புரோ கபடி லீக் போட்டித் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ் 35-33 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சையும், தபாங் டெல்லி 32-31 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சையும் தோற்கடித்து ‘திரில்’ வெற்றியை பெற்றன. இன்றைய ஆட்டங்களில் உ.பி.யோத்தா- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), தபாங் டெல்லி- தமிழ் தலைவாஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

* இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு சர்வதேச போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது பாணியை கடைபிடிப்பீர்களா? என்று தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கிடம் நேற்று கேட்ட போது, ‘நிச்சயமாக இல்லை’ என்று பதில் அளித்தார். மேலும் அவர், ‘தமிழக அணிக்காக நான் உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் விளையாடி வருகிறேன். தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு.’ என்றும் குறிப்பிட்டார்.

* இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் இடம் பெறவில்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை மனதில் கொண்டு ஐ.பி.எல். போட்டியை தவிர்க்க முடிவு செய்துள்ளனர்.


Next Story