புரோ கபடியில் கடைசி ஆட்டத்தை ‘டை’யுடன் முடித்தது தமிழ் தலைவாஸ்


புரோ கபடியில் கடைசி ஆட்டத்தை ‘டை’யுடன் முடித்தது தமிழ் தலைவாஸ்
x
தினத்தந்தி 25 Dec 2018 11:15 PM GMT (Updated: 25 Dec 2018 7:33 PM GMT)

புரோ கபடியில் தமிழ்தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் (சமன்) முடிந்தது.

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 127-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை சந்தித்தது. இதில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்த வண்ணம் இருந்தன. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16-14 என்று கணக்கில் சற்று முன்னிலை பெற்றது.

இதையடுத்து பிற்பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் 20-20 என்று சமநிலை வந்த பிறகு அரியானாவின் கை கொஞ்சம் (26-23) ஓங்கியது. இதன் பின்னர் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர், அடுத்தடுத்த ரைடுகளில் புள்ளிகளை அள்ளினார். ஒரு முறை 3 பேரை அவுட் செய்து, ஆல்-அவுட் ஆக்கி அணியை நிமிர வைத்தார். தலைவாஸ் அணி வெற்றியை நோக்கி பயணித்த நிலையில் கடைசி நிமிடத்தில் 2 புள்ளி முன்னிலை கண்டிருந்தது.

இந்த சமயத்தில் ரைடுக்கு சென்ற அஜய் தாக்கூர், நேரத்தை கடத்தும் நோக்கில் யாரையும் அவுட் செய்ய முயற்சிக்காமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தார். அதுவும் தங்கள் பகுதி வீரர்களை நோக்கி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அரியானா வீரர்கள் ஓடிச்சென்று அவரை அப்படியே மடக்கி தூக்கி தங்கள் பக்கம் இழுத்தனர். இதனால் திகைத்து போன அஜய் தாக்கூர் பரிதாபமாக வெளியேறினார். இதன் பின்னர் அரியானா வீரர் விகாஸ் கன்டோலா ரைடு மூலம் ஒரு புள்ளி எடுத்து, திரிலிங்கான ஆட்டத்தை 40-40 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தார். அத்துடன் ஆட்ட நேரமும் முடிவுக்கு வந்தது. 25 முறை ரைடுக்கு சென்று அதில் 17 புள்ளிகளை சேர்த்து அணிக்கு வலுவூட்டிய அஜய் தாக்கூர் இறுதி கட்டத்தில் செய்த தவறினால் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

இத்துடன் இந்த சீசனில் தமிழ் தலைவாசின் போட்டி முடிவுக்கு வந்தது. ‘பி’ பிரிவில் அங்கம் வகித்த தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 13 தோல்வி, 4 டை என்று மொத்தம் 42 புள்ளிகள் எடுத்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு நடையை கட்டியது. கடந்த ஆண்டு அறிமுகம் ஆன தமிழ் தலைவாஸ் அணி, முதலாவது சீசனிலும் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. ‘ஏ’ பிரிவில் குஜராத், மும்பை, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு ‘பி’ பிரிவில் பாட்னா பைரட்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இன்றைய லீக் ஆட்டங்களில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story