துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 21 Jan 2019 10:15 PM GMT (Updated: 21 Jan 2019 9:41 PM GMT)

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த இளம் வீரர் பிரித்வி ஷா கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து விலகினார்.


* 11-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 10 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சென்னை ஐ.சி.எப். வீரர் ஷியாம் நிகில், வியட்நாம் வீரர் டிரான் தின் மின்ஹை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 36-வது காய் நகர்த்தலில் ஷியாம் நிகில் வெற்றி பெற்றார். மற்றொரு சென்னை வீரர் முத்தையா 31-வது காய் நகர்த்தலில் வியட்நாமின் மெகரன்டோ சுசன்டோவை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் லுகாவ்ஸ்கோ மேக்சிம், இந்திய வீரர் ஆகாசை வீழ்த்தினார். 5-வது சுற்று முடிவில் ஷியாம் நிகில் (இந்தியா), லுகாவ்ஸ்கோ மேக்சிம் (ரஷியா) ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றனர்.

* தமிழ்நாடு தபால் துறை சார்பில் 32-வது அகில இந்திய தபால் துறை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை சென்னை ஆக்கி சங்க தலைவரும், ஒலிம்பியனுமான வி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் எம்.சம்பத் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு அணி 5-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை தோற்கடித்தது. தமிழக அணியில் தினேஷ்குமார் 3 கோலும், நந்தகுமார், சுதர்சன் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி 4-3 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் மத்திய பிரதேசம்-ஒடிசா (பகல் 1.30 மணி), தமிழ்நாடு-உத்தரபிரதேசம் (பிற்பகல் 3 மணி) அணிகள் மோகின்றன.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது. எங்கள் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்களது திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இந்த உலக கோப்பை போட்டி எங்களுக்கு நினைவில் நிற்க கூடியதாக அமையும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

* இந்திய பேட்மின்டன் அணியின் பயிற்சியாளர் கோபிசந்த் ஐதராபாத்தில் நடந்த பாராட்டு விழாவில் பேசுகையில், ‘ஆண்டுதோறும் இந்திய பேட்மிண்டன் முன்னேற்றம் கண்டு வருகிறது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறியது பெரிய விஷயமாக இருந்தது. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் முதல் வெண்கலப்பதக்கம் வென்றார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல்முறையாக தங்கப்பதக்கம் வெல்லும் என நம்புகிறேன்’ என்று கூறினார்.

* ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த இளம் வீரர் பிரித்வி ஷா டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து விலகினார். இந்த நிலையில் பிரித்வி ஷா அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு நான் உடல் தகுதியை எட்டி விடுவேன். முழு உடல் தகுதியை எட்ட கடினமாக உழைத்து வருகிறேன். ஆஸ்திரேலிய தொடரில் விளையாட ஆர்வமாக இருந்தேன். எதிர்பாராமல் ஏற்பட்ட காயத்தால் எனது எண்ணம் ஈடேறவில்லை. அது எனக்கு ஏமாற்றம் அளித்தாலும், இந்திய அணி தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார். பிரித்வி ஷா ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.


Next Story