துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 24 Jan 2019 9:30 PM GMT (Updated: 24 Jan 2019 8:02 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது.

வீரர்களை கடனாக பெற்ற சென்னையின் எப்.சி:  12 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தங்கள் அணியை வலுப்படுத்தவும், அடுத்து வரும் முக்கியமான ஆசிய கிளப் கால்பந்து போட்டியில் சிறப்பாக செயல்படவும் சென்னையின் எப்.சி. அணி நிர்வாகம் கேரளா பிளாஸ்டர்சிடம் இருந்து சி.கே.வினீத், ஹாலிசரன் நார்ஜாரி ஆகிய முன்னணி வீரர்களை கடனாக பெற்றுள்ளது. இந்த சீசன் முடியும் வரை அவர்கள் இருவரும் சென்னை அணிக்காக ஆடுவார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்னில் ஆல்-அவுட்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 289 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஹெட்மயர் (81 ரன், 9 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாய் ஹோப் (57 ரன்), ரோஸ்டன் சேஸ் (54 ரன்) அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை ஆடியது. 18 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 4 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது.

ரஞ்சி கிரிக்கெட்: கேரளா 106 ரன்னில் சுருண்டது
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேரளா-நடப்பு சாம்பியன் விதர்பா அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி ஆட்டம் வயநாட்டில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கேரள அணி, விதர்பாவின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 28.4 ஓவர்களில் 106 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 37 ரன்கள் எடுத்தார். விதர்பா வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். முதல்தர போட்டியில் உமேஷ்யாதவின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய விதர்பா அணி ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூருவில் தொடங்கிய சவுராஷ்டிராவுக்கு எதிரான மற்றொரு அரைஇறுதியில் முதலில் ஆடிய கர்நாடக அணி நேற்றைய முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது.

தபால்துறை ஆக்கி: தமிழக அணி தோல்வி
தமிழ்நாடு தபால் துறை சார்பில் 32-வது அகில இந்திய தபால் துறை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் கர்நாடக அணி 4-0 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் மத்தியபிரதேச அணி 4-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தியது. இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா-மத்தியபிரதேசம் (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னதாக காலை 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு-பஞ்சாப் அணிகள் சந்திக்கின்றன.

சென்னை செஸ்: ஜார்ஜியா வீரர் முன்னிலை
11-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 9-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் லுகோவ்ஸ்கோ மேக்சிம், ஜார்ஜியாவின் பான்ட்சுலா லெவானிடம் தோல்வியை தழுவினார். லெவான் 8 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். மேக்சிம் 7.5 புள்ளியுடன் 2-வது இடமும், இந்தியாவின் விக்னேஷ், கார்த்திக் வெங்கட்ராமன், பிரனேஷ் உள்பட 12 வீரர்கள் 7 புள்ளியுடன் 3-வது இடமும் வகிக்கிறார்கள். கடைசி சுற்று ஆட்டங்கள் இன்று நடக்கின்றன.

இந்தோனேஷிய பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-14, 21-9 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 23-21, 21-7 என்ற நேர்செட்டில் டுன்ஜங்கையும் (இந்தோனேஷியா), இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-17, 21-15 என்ற நேர் செட்டில் பிட்ரியானியையும் (இந்தோனேஷியா) சாய்த்து கால்இறுதியை எட்டினர்.

சென்னையில் நீச்சல் போட்டி: கேரள விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 1,200 பேர் கலந்து கொள்கிறார்கள்.

Next Story