சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ்: ஜார்ஜியா வீரர் பான்ட்சுலா ‘சாம்பியன்’


சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ்: ஜார்ஜியா வீரர் பான்ட்சுலா ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 25 Jan 2019 9:00 PM GMT (Updated: 25 Jan 2019 8:34 PM GMT)

11–வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது.

சென்னை, 

11–வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதில் 10–வது மற்றும் கடைசி சுற்று பந்தயங்கள் நேற்று நடந்தது. புள்ளி பட்டியலில் முன்னிலை வகித்த ஜார்ஜியா வீரர் பான்ட்சுலா லெவான், தனது கடைசி சுற்றில் ரஷிய வீரர் பிரெட்கே அலெக்சாண்டருடன் 16–வது காய் நகர்த்தலில் ‘டிரா’ கண்டார். 10 சுற்று முடிவில் லெவான் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். 8–வது சுற்று வரை முன்னிலை வகித்த ரஷிய வீரர் லுகோவ்ஸ்கோ மேக்சிம் கடைசி இரு சுற்றுகளில் தோல்வியை தழுவியதால் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

2 முதல் 6–வது இடங்களை முறையே போபோவ் இவான் (ரஷியா) அலெக்சாண்ட்ரோவ் அலெக்செஜ் (பெலாரஸ்), பாய்சாட்ஸி லுகா (ஜார்ஜியா), சுசான்டோ (இந்தோனேஷியா), இவான் ரோஜூம் (ரஷியா) ஆகியோர் பிடித்தனர். இவர்கள் அனைவரும் தலா 8 புள்ளிகள் பெற்றிருந்த போதிலும் வெற்றி, டிரா அடிப்படையில் தரநிலை பிரிக்கப்பட்டது. மேக்சிம் (ரஷியா), கார்த்திக் வெங்கடராமன் (இந்தியா), பிரெட்கே அலெக்சாண்டர் (ரஷியா), கிரிஷ் கவுசிக் (இந்தியா) ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் அடுத்த இடங்களை பெற்றனர்.

வாகை சூடிய பான்ட்சுலா லெவானுக்கு ரூ.3 லட்சம் தொகையுடன், சக்தி குரூப் என்.மகாலிங்கம் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் முன்னாள் செஸ் வீரர் மானுவல் ஆரோன், சர்வதேச செஸ் சம்மேளன துணைத்தலைவர் டி.வி.சுந்தர், தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலாளர் ஸ்டீபன் பாலசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story