இந்தோனேஷிய பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா சாம்பியன் காயத்தால் மரின் பாதியில் விலகினார்


இந்தோனேஷிய பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா சாம்பியன் காயத்தால் மரின் பாதியில் விலகினார்
x
தினத்தந்தி 27 Jan 2019 9:45 PM GMT (Updated: 27 Jan 2019 6:43 PM GMT)

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வந்தது.

ஜகர்தா, 

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

இதில் சிறப்பாக ஆடிய இடக்கை ஆட்டக்காரரான கரோலினா மரின் துள்ளி குதித்து ஒரு ஷாட்டை அடித்து விட்டு, வலது காலை பிடித்தபடி கீழே சாய்ந்தார். கால் முட்டியில் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு தட்டுத்தடுமாறி எழுந்து நடந்த அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆடினார். ஆனால் சிறிது நேரத்தில் தன்னால் தொடர்ந்து ஆட இயலாது என்று கூறி கண்ணீரோடு வெளியேறினார். அப்போது கரோலினா மரின் முதல் செட்டில் 10–4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார்.

மரின் பாதியிலேயே விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 28 வயதான சாய்னா வென்ற 24–வது சர்வதேச பட்டம் இதுவாகும். அவருக்கு ரூ.18½ லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. சாய்னா கூறுகையில் ‘‘இந்த மாதிரி இறுதிப்போட்டி நிறைவடைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஆனாலும் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சியே. இந்த ஆட்டத்தில் கரோலினா மரினின் கை ஓங்கி இருந்தாலும், கடைசி வரை போராடும் முனைப்புடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மரின் காயத்தில் சிக்கி விட்டார்’ என்றார்.


Next Story