புரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை


புரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை
x
தினத்தந்தி 29 Jan 2019 10:42 PM GMT (Updated: 29 Jan 2019 10:42 PM GMT)

‘புரோ கைப்பந்து லீக் போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது’ என்று அந்த அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி வருகிற 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு வீரர்களுடன் 2 வெளிநாட்டினரும் இடம் பெறுவார்கள்.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். பிப்ரவரி 2-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கிலும், பிப்ரவரி 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 லீக் ஆட்டம் மற்றும் அரைஇறுதி, இறுதிப்போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் அரங்கேறுகிறது. தினசரி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி 1, சோனி 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஒவ்வொரு ஆட்டமும் 5 செட்கள் கொண்டதாகும். முதலில் 15 புள்ளியை எட்டும் அணி செட்டை வெல்லும். 5-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு மொத்தம் 3 வெற்றி புள்ளிகள் கிடைக்கும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளி எதுவும் கிடைக்காது. 3-2 மற்றும் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு 2 வெற்றி புள்ளிகள் மட்டுமே கிட்டும்.

புரோ கைப்பந்து லீக் போட்டிக்கான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கடந்த 12-ந் தேதி முதல் ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. போட்டி குறித்து சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷெல்டன் மோசஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புரோ கைப்பந்து லீக் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. போகப்போக இந்த போட்டி மக்களை நிச்சயம் வெகுவாக கவரும். இந்த போட்டியின் மூலம் பல இளைஞர்கள் கைப்பந்து ஆட்டத்தில் ஈடுபட முற்படுவார்கள். இதுபோன்ற போட்டிகளில் பண பலன் கிடைப்பதால் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கைப்பந்து ஆட்டத்தில் களம் இறக்க ஆர்வம் காட்டுவார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து ஆடுவதன் மூலம் நமது வீரர்கள் நல்ல ஆட்ட அனுபவத்தை பெற முடியும். இதன் மூலம் இந்திய கைப்பந்து அணியின் தரம் உயரும். இது இந்திய அணி சர்வதேச போட்டிகளில் வெற்றி வாகை சூட வழிவகுக்கும். போட்டி முழுவதும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுவதால் வீரர்கள் பிரபலம் அடைவதுடன் அவர்களின் வாழ்க்கை ஸ்டைலும் மாறும்.

போட்டியில் பல விதிமுறை மாற்றம் செய்து இருப்பதன் மூலம் இந்த லீக் போட்டி 20 ஓவர் கிரிக்கெட் போல் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளும் சமபலம் வாய்ந்தவை தான். எனவே போட்டி தினத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ? அந்த அணி வெற்றி பெறும். சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் நவின் ராஜா ஜேக்கப், ஒலிம்பிக் போட்டியில் ஆடிய கனடாவை சேர்ந்த ரூடி, லாத்வியாவை சேர்ந்த ருஸ்லான் மற்றும் கபில்தேவ், அக்கின் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். செர்வ், அட்டாக்கிங் உள்பட எல்லா துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே இந்த போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஷெல்டன் மோசஸ் கூறினார்.

Next Story