50 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் ராஜஸ்தான் வீரர் ஜிதேந்தர் முதலிடம்


50 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் ராஜஸ்தான் வீரர் ஜிதேந்தர் முதலிடம்
x
தினத்தந்தி 17 Feb 2019 9:45 PM GMT (Updated: 17 Feb 2019 9:08 PM GMT)

சென்னையில் நடந்த 50 கிலோமீட்டர் நடைப்பந்தயத்தில் ராஜஸ்தான் வீரர் ஜிதேந்தர் சிங் முதலிடத்தை பிடித்தார்.

சென்னை, 

சென்னையில் நடந்த 50 கிலோமீட்டர் நடைப்பந்தயத்தில் ராஜஸ்தான் வீரர் ஜிதேந்தர் சிங் முதலிடத்தை பிடித்தார்.

தேசிய நடைப்பந்தயம்

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6–வது தேசிய ஓபன் நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 2 நாட்கள் நடந்தன. முதல் நாளில் 20 கிலோ மீட்டர் பந்தயம் நடந்தது. 2–வது நாளான நேற்று 50 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என்று இரு பிரிவாக போட்டி நடத்தப்பட்டது.

ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் 24 பேர் பங்கேற்றனர். அவர்கள் அண்ணாசாலை மன்றோ சிலையில் இருந்து ஜிம்கானா கிளப் வழியாக தீவுத்திடல் வரை 50 கிலோமீட்டர் தூரத்தை கணக்கிட்டு பல முறை சுற்றி வந்தனர். முடிவில் ராஜஸ்தானை சேர்ந்த ஜிதேந்தர்சிங் ரத்தோர் 4 மணி 23 நிமிடம் 23 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். அவருக்கு தங்கப்பதக்கத்துடன் ரூ.50 ஆயிரம் பரிசும் கிடைத்தது. குஜராத் வீரர் ஜோஷி சாகர் (4 மணி 24 நிமிடம் 21 வினாடி) 2–வது இடத்தையும், அரியானாவின் பவன்குமார் (4 மணி 30 நிமிடம் 49 வினாடி) 3–வது இடத்தையும் பெற்றனர். உலக சாம்பியன்ஷிப் நடைப்பந்தயத்திற்கான தகுதி இலக்கு நேரம் 3 மணி 59 நிமிடங்கள் ஆகும். அந்த நேரத்திற்குள் எந்த வீரர்களும் இலக்கை அடையவில்லை.

சுராஜ், ரோஜி பட்டீல்

ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் (20 வயதுக்குட்பட்டோர்) நடைப்பந்தயத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுராஜ் பன்வார் 43 நிமிடம் 19 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்தை வென்றார். ஜூனைட் (அரியானா) 2–வது இடத்தையும், பார்மன் அலி (உத்தரபிரதேசம்) 3–வது இடத்தையும் பெற்றனர்.

இதன் பெண்கள் பிரிவில் உத்தரகாண்ட் வீராங்கனை ரோஜி பட்டீல் தங்கமங்கையாக உருவெடுத்தார். அவர் 53 நிமிடம் 38 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். சுவர்னா கபேஸ் (மத்தியபிரதேசம்) 2–வதாகவும், குர்பிரீத் கவுர் (பஞ்சாப்) 3–வதாகவும் வந்தனர். இவர்களுக்கு முதல் 3 பரிசுகள் முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய தடகள சம்மேளன செயலாளர் சி.கே.வல்சன், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா, ஜெம் மருத்துவமனை டாக்டர் செந்தில்நாதன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


Next Story