துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:13 PM GMT (Updated: 18 Feb 2019 10:13 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில் புதுமுக வீரராக, மயங்க் மார்கண்டே இடம் பெற்றுள்ளார்.


* ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 24-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் மிகவும் சிறந்த அணியாகும். எனவே அவர்களை எதிர்கொள்ள நாங்கள் முழு நம்பிக்கையுடனும், தெளிவான ஆட்ட திட்டத்துடனும் செல்ல வேண்டியது அவசியமானதாகும். ஆட்ட திறனில் லேசான சறுக்கலை சந்தித்தாலும் அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளார்.

* 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமை, சர்வதேச விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பூமா விளம்பர தூதராக 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. பெண்களுக்கு ஆதரவும், ஊக்கமும் அளிப்பது எப்பொழுதும் சரியானது என்பதை பூமா நிறுவனம் நம்புகிறது என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அபிஷேக் கங்குலி தெரிவித்துள்ளார். மேரிகோமுக்கான ஒப்பந்த தொகை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படவில்லை.

* உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நாளை (20-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான 16 இடங்களுக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ள இந்த போட்டியில் புலவாமா தாக்குதல் பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் வீரர்களுக்கு பங்கேற்க அனுமதி அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள விசா கேட்டு விண்ணப்பித்து இருந்த 2 பாகிஸ்தான் வீரர்களுக்கும் விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய தேசிய ரைபிள் சங்க செயலாளர் ராஜீவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில் புதுமுக வீரராக இடம் பிடித்துள்ள 21 வயதான சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே அளித்த ஒரு பேட்டியில், ‘மைசூருவில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி விட்டு ஓட்டல் அறைக்கு திரும்பி வந்து எனது செல்போனை எடுத்து பார்த்த போது நிறைய மிஸ்டு கால் மற்றும் வாழ்த்து செய்தி அடங்கிய குறுந்தகவல்கள் இருந்தன. நிறைய அழைப்புகளை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தேன். இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக வந்த வாழ்த்து செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் சோதனை செய்து பார்த்தேன். அதனை பார்த்த பிறகு தான் அந்த செய்தி உண்மை என்று நம்பினேன். அந்த மகிழ்ச்சியில் சிறிது நேரம் பேச்சுக்கூட வரவில்லை. ஏனெனில் நான் இதனை எதிர்பார்க்கவில்லை. பின்னர் எனது பெற்றோரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தேன். அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர்’ என்று தெரிவித்தார்.

* ஜெர்மனியை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவானான போரிஸ் பெக்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு நீண்ட கால வெற்றி வரலாறு உண்டு. இந்தியாவில் டென்னிஸ் மிகவும் பிரபலமானது. நிறைய டென்னிஸ் வீரர்கள் உள்ளனர். ஆனால் சமீப காலங்களில் இந்திய வீரர்கள் அதிகம் வெற்றி பெறுவதில்லை. லியாண்டர் பெயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்சா போன்றோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்தியாவில் டென்னிஸ் ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செர்பியா வீரர் ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) அடுத்த 2 ஆண்டுகளில் ஜோகோவிச் கடந்து முன்னேறுவார் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

* ஐ லீக் கால்பந்து போட்டியில் மினெர்வா பஞ்சாப்-ரியல் காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் ஜம்மு-காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. காஷ்மீரில் உள்ள புலவாயாவில் பயங்கரவாதிகளால், துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை அடுத்து ஸ்ரீநகரில் விளையாட மினெர்வா பஞ்சாப் கிளப் அணி மறுத்து விட்டது. போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற மினெர்வா பஞ்சாப் கிளப் விடுத்த கோரிக்கையை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஏற்றுக்கொள்ளவில்லை. போட்டி நடைபெற வேண்டிய நேரத்தில் உள்ளூர் அணியான ரியல் காஷ்மீர் வீரர்கள் களம் இறங்கினார்கள். ஆனால் போட்டி குறித்த முடிவை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மினெர்வா பஞ்சாப் கிளப் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தங்களது ஆட்டத்தை ஸ்ரீநகருக்கு பதிலாக மாற்று இடத்தில் வேறு தேதியில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* 9-வது தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி (ஏ டிவிசன்) சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலத்தில் உள்ள ஹிசாரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ரெயில்வே அணி 5-0 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ரெயில்வே அணி தரப்பில் நேகா, நவ்னீத் கவுர் தலா 2 கோலும், வந்தனா கட்டாரியா ஒரு கோலும் அடித்தனர். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மராட்டிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் அரியானாவை தோற்கடித்தது.



Next Story