துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 24 Feb 2019 10:00 PM GMT (Updated: 24 Feb 2019 9:18 PM GMT)

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் தமிழக கால்பந்து வீரர் கவுரவிக்கப்பட்டார்.


தென்ஆப்பிரிக்க அணியில் அம்லா நீக்கம்

சொந்த மண்ணில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது. இதில் முதல் 3 ஒரு நாள் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மூத்த வீரர் அம்லா நீக்கப்பட்டார். கால் முட்டி காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட வேகப்பந்து வீச்சாளர் நிகிடி அழைக்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மணிக்கு ஏறக்குறைய 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய ஆன்ரிச் நோர்ட்ஜி புதுமுகமாக அணிக்கு தேர்வாகியுள்ளார்.

தமிழக கால்பந்து வீரர் கவுரவிப்பு

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த சிமோன் சுந்தரராஜ், சென்னையின் எப்.சி. அணி சார்பில் நேற்று கவுரவிக்கப்பட்டார். தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்தில் அவருக்கு சென்னையின் எப்.சி. சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 81 வயதான சிமோன் சுந்தரராஜ், 1960-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடினார். இந்திய கால்பந்து அணியின் கடைசி ஒலிம்பிக் இது தான். அதில் இந்தியாவுக்காக கடைசி கோல் அடித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தமிழக சந்தோஷ் கோப்பை அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

தெண்டுல்கர் கருத்துக்கு கங்குலி பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக்கில் விளையாடி 2 புள்ளிகள் பெறுவதை சச்சின் தெண்டுல்கர் விரும்புகிறார். ஆனால் நானோ உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான வழியை தான் பார்க்க வேண்டும். இந்த உலக கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத உள்ளன. அதனால் ஒரு ஆட்டத்தில் (பாகிஸ்தானுக்கு எதிராக) விளையாட மறுப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. உலக கோப்பையை வெல்வதே நமது இலக்கு’ என்றார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணி அபாரம்

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 85-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. நாளை மறுதினம் நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன .


Next Story