துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 27 Feb 2019 9:00 PM GMT (Updated: 27 Feb 2019 7:16 PM GMT)

இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் காயமடைந்தார்.


காயத்தால் கேன் ரிச்சர்ட்சன் விலகல்

இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், பயிற்சியின் போது இடது விலா பகுதியில் காயமடைந்தார். வலி அதிகமாக இருந்ததால் 20 ஓவர் தொடரில் அவர் ஆடவில்லை. இந்த நிலையில் காயம் குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து அவர் விலகியதோடு, உடனடியாக தாயகம் திரும்புகிறார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

ஜெயசூர்யாவுக்கு ஜெயவர்த்தனே கண்டனம்

ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவுக்கு, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இது குறித்து இலங்கை முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்த்தனே கருத்து தெரிவிக்கும் போது, ‘புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான ஜெயசூர்யாவுக்கு ஐ.சி.சி. தடை விதித்தது இலங்கை கிரிக்கெட்டுக்கு மோசமான ஒரு நாளாகும். நமது தேசத்தின் அழகான கிரிக்கெட்டை நேசிப்பவராக இருந்தால், ஊழல் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தி, அதன் மூலம் அடுத்த தலைமுறை வீரர்களை பாதுகாக்க வேண்டும். ஐ.சி.சி.யின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும்’ என்றார்.

‘வாய்ப்பு தாருங்கள்’- ரஹானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானேவுக்கு கடந்த ஓராண்டு காலமாக ஒரு நாள் போட்டி அணியில் இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து 31 வயதான ரஹானே அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு பேட்ஸ்மேனாக நான் ஆக்ரோஷமானவன். ஆனால் இயற்கையாகவே நான் கூச்ச சுபாவம் உள்ளவன். இதற்கு எல்லாம் எனது பேட் தான் பதில் அளிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவன். ஆனால் சில நேரம் உண்மையை பேச வேண்டி உள்ளது. அணியின் நலனுக்கே நான் எப்போதும் முன்னுரிமை அளித்துள்ளேன். அதே போல் அணி நிர்வாகம் மற்றும் தேர்வு குழுவினரின் முடிவுகளை மதித்து நடந்து வந்திருக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன். ஒரு வீரராக நான் எப்போதும் அணிக்கு முன்னுரிமை அளிக்கும் போது, எனக்கு சீரான வாய்ப்பு தரப்பட வேண்டும். அதற்கு நான் தகுதியானவன். அதைத் தான் நான் கேட்கிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் ஒரு போதும் தனிப்பட்ட சாதனைக்காக விளையாடியதில்லை. அணி நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப தொடக்க மற்றும் மிடில் வரிசையில் விளையாடி உள்ளேன்’ என்றார்.

நியூசிலாந்து-வங்காளதேசம் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த வங்காளதேச அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்குகிறது. அனுபவம் வாய்ந்த வங்காளதேச பேட்ஸ்மேன்கள் ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் காயத்தால் இந்த டெஸ்டில் ஆடவில்லை. மக்முதுல்லா அணியை வழிநடத்துகிறார். நியூசிலாந்து மண்ணில் இதுவரை ஆடியுள்ள 7 டெஸ்டுகளிலும் தோற்று இருக்கும் வங்காளதேச அணி, இந்த முறையும் தாக்குப்பிடிப்பது கடினம் தான்.

ஐ.எஸ்.எல்.: ஜாம்ஷெட்பூர் ஆறுதல் வெற்றி

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஜெட்பூரில் நடந்த 86-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 5-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை ஊதித்தள்ளி ஆறுதல் வெற்றி பெற்றது. ஜாம்ஷெட்பூர் அணியில் ஆகஸ்டின் பெர்னாண்டஸ், மைக்கேல் சூசைராஜ், பாப்லோ மோர்கடோ (2), கார்லஸ் கால்வோ ஆகியோர் கோல் போட்டனர். தனது கடைசி லீக்கில் ஆடிய ஜாம்ஷெட்பூர் அணி 6 வெற்றி, 9 டிரா, 3 தோல்வி என்று 27 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தது. புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் பெங்களூரு அணிக்கு இது 4-வது தோல்வியாகும். கோவாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, கோவா எப்.சி.யை எதிர்கொள்கிறது.


Next Story