பிற விளையாட்டு

ஆசிய மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தல் + "||" + Bajrang Pooniya won the gold medal in Asian Wrestling

ஆசிய மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

ஆசிய மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஆசிய மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
ஸியான்,

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஸியான் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் பஜ்ரங் பூனியா எதிர்பார்த்தபடியே தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். 65 கிலோ உடல் எடைப்பிரிவின் பிரீஸ்டைல் பிரிவில் தனது தொடக்க கட்ட ஆட்டங்களில் பெய்மான் பியாபானி (ஈரான்), சார்லஸ் பெர்ன் (இலங்கை) ஆகியோரை தோற்கடித்த பஜ்ரங் பூனியா அரைஇறுதியில் 12-1 என்ற புள்ளி கணக்கில் சிரோஜிதின் காசனோவை (உஸ்பெகிஸ்தான்) புரட்டியெடுத்தார்.


இதைத் தொடர்ந்து நடந்த இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் சயட்பெக் ஒகாசோவை எதிர்கொண்டார். இதில் ஆரம்பத்தில் தடுமாறிய பஜ்ரங் பூனியா ஒரு கட்டத்தில் 2-7 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்தார். இதன் பிறகு தனது வலுவான கிடுக்குபிடியின் மூலம் மீண்டெழுந்த பூனியா தொடர்ச்சியாக 10 புள்ளிகளை சேகரித்து அசத்தினார். முடிவில் பஜ்ரங் பூனியா 12-7 என்ற புள்ளி கணக்கில் ஒகாசோவை சாய்த்து மீண்டும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் மகுடம் சூடிய பஜ்ரங் பூனியா இப்போது ஆசிய மல்யுத்தத்திலும் வாகை சூடியிருப்பதன் மூலம், 2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புக்கு வலுவூட்டியிருக்கிறார்.

79 கிலோ எடைப்பிரிவில் அரைஇறுதியில் 3-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் உசெர்பயேவை தோற்கடித்த இந்தியாவின் பர்வீன் ராணா இறுதி சுற்றில் பமான் முகமது தேமோரியுடன் (ஈரான்) மோதினார். இதில் பர்வீன் ராணா 0-3 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. மற்றொரு இந்திய வீரர் சத்யவார்ட் காடியான் 97 கிலோ எடைப் பிரிவில் கால்இறுதியில் தோற்றாலும் அதன் பிறகு கிடைத்த ‘ரிபிசாஜ்’ வாய்ப்பின் மூலம் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டம் வரை முன்னேறியதோடு வெண்கலப்பதக்கத்தையும் வசப்படுத்தினார்.