ஆசிய குத்துச்சண்டையில் 6 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி


ஆசிய குத்துச்சண்டையில் 6 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 26 April 2019 12:36 AM GMT (Updated: 26 April 2019 12:36 AM GMT)

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது.

பாங்காக்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 3-2 என்ற கணக்கில் சீனாவின் ஹூ ஜியான்குனை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் 3-2 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் எங்க் அமர் காக்ஹூவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதேபோல் 49 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அரைஇறுதியில் அவரை எதிர்த்து போட்டியிட இருந்த கஜகஸ்தான் வீரர் தெமிர்டாஸ் சுஸ்சுபோவ் காயம் காரணமாக விலகியதால் போட்டியின்றி தீபக் சிக் முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான ஆஷிஷ் குமார் (75 கிலோ), ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை சாய்த்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான 81 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் பூஜா ராணி 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பாரிஜாவையும், இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் (64 கிலோ) 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மப்துனாஹோன் மெலிவாவையும் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தனர். இறுதிப்போட்டியை எட்டிய 6 இந்தியர்களும் குறைந்தது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

அதேசமயம் 60 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஷிவ தபா 2-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஜாகிர் சப்ருலினிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். ஆசிய போட்டியில் ஷிவதபா தொடர்ச்சியாக வென்ற 4-வது பதக்கம் இதுவாகும். ஆஷித் (69 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்), சரிதா தேவி (60 கிலோ), மனிஷா (54 கிலோ), நிகாத் ஜரீன் (51 கிலோ), சோனியா சாஹல் (57 கிலோ) ஆகிய இந்தியர்களும் தங்களது அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

Next Story