விளையாட்டு உலகம் : பறக்கும் சீக்கியர்


விளையாட்டு உலகம் : பறக்கும் சீக்கியர்
x
தினத்தந்தி 26 April 2019 6:34 AM GMT (Updated: 26 April 2019 6:34 AM GMT)

தினமும் இவர் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிப்படிப்பை படித்தார்.

இந்திய தடகள விளையாட்டுத்துறையில் தனிப்பெரும் சாதனை படைத்தவர் மில்கா சிங். இவரது மின்னல் வேக ஓட்டத்திறன் காரணமாக இவருக்கு ‘பறக்கும் சீக்கியர்’ என்ற செல்லப்பெயர் உண்டு.

இந்தியா சுதந்திரம் பெறும் முன்பு ஒருங்கிணைந்த இந்தியாவில் உள்ள கோவிந்தபுரா என்ற இடத்தில் 1935-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி மில்கா சிங் பிறந்தார். இந்த இடம் தற்போது பாகிஸ்தான் பகுதியாகும். தினமும் இவர் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிப்படிப்பை படித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்தில் இவரது பெற்றோர் படுகொலை செய்யப்பட்டனர். கலவரக்கும்பலிடம் இருந்து உயிர் தப்பிய மில்கா சிங் டெல்லியில் உள்ள சகோதரி வீட்டில் தஞ்சம் புகுந்தார். பின்னர் அவர் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு அவர் ஓட்டப்பந்தய பயிற்சி பெற்றார். அப்போது நடைபெற்ற ஓட்டப்பந்தயங்களில் அவர் வெற்றி பெற்றார்.

1957-ம் ஆண்டு முதல் 1961-ம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆக திகழ்ந்தார். 1958-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து 1962-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கம் வென்றார்.

மில்கா சிங் தேசிய மற்றும் ஆசிய அளவில் தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இருப்பினும் 1960- ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கத்தை நூலிழையில் இவர் தவறவிட்டார். இது இவருக்கு மிகப்பெரிய சோகமாக அமைந்தது. இந்த போட்டியின் போது தென்ஆப்பிரிக்க வீரர் மால்கம் ஸ்பென்ஸ்சும் இவரும் ஒரே நேரத்தில் எல்லைக்கோட்டை தொட்டனர். இருப்பினும் 0.1 வினாடி மால்கம் முந்திவிட்டார். இதனால் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டார். இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களில் முதல் இரண்டு இடம் பிடித்தவர்கள் உலக சாதனை நிகழ்த்தினார்கள். மால்கம் மற்றும் மில்காசிங் இருவரும் பந்தய தூரத்தை 45.6 வினாடிகளில் கடந்து ஒலிம்பிக் சாதனை படைத்து இருந்தனர். மேலும் இது தேசிய சாதனையாகும். இவரது இந்த சாதனையை 38 ஆண்டுகளாக எந்த இந்திய வீரர்களாலும் முறியடிக்கமுடியவில்லை.

1960-ம் ஆண்டு நேருவின் விருப்பத்திற்கு ஏற்ப பாகிஸ்தான் அரசின் அழைப்பை ஏற்று அங்கு நடைபெற்ற ஓட்டப்பந்தயம் ஒன்றில் கலந்துகொண்டார். பாகிஸ்தான் வீரர் அப்துல் காலித்-மில்கா சிங் இடையே ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. சுமார் 7 ஆயிரம் பேர் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் மில்கா சிங் அப்துல் காலித்தை வென்றார். அப்போது பரிசளித்த பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் அவருக்கு `பறக்கும் சீக்கியர்' என்ற பட்டத்தை அளித்தார்.

விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். அவரது சாதனை களைப்பாராட்டி இந்திய அரசு 2001-ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

மில்காசிங்கின் மனைவி பெயர் நிர்மல் கவுர். இவர் கைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். 1955-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உண்டு. இவரது மகன் ஜீவா மில்கா சிங் கோல்ப் விளையாட்டு வீரர் ஆக திகழ்கிறார்.

Next Story