துளிகள்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது.
* உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ரைபிள்-பிஸ்டல்) சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது. கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மானு பாகெர், ஆசிய விளையாட்டு சாம்பியனான ராஹி சர்னோபாத் ஆகியோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதே போல் பெண்களுக்கான ரைபிள் மூன்று நிலை பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் காயத்ரி, சுனிதி சவுகான், காஜல் சைனி ஆகியோர் தகுதி சுற்றை தாண்டவில்லை. இருப்பினும் பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக முதலிடம் பிடித்து அசத்தியது. இந்தியா 3 தங்கமும், ஒரு வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றியது. போட்டியை நடத்திய சீனா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 5 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், ரஷியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என்று 7 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பெற்றது.
* பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் 11 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 4-6, 4-6 என்ற நேர் செட்டில் ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
* சீனாவில் நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசி நாளான நேற்று இந்திய வீரர்கள் ஹர்பிரீத் சிங் (82 கிலோ எடைப்பிரிவு) வெள்ளிப்பதக்கமும், ஞானேந்திர சிங் வெண்கலப்பதக்கமும் (60 கிலோ பிரிவு) வென்றனர். இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 16 பதக்கங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
* ஹாங்காங்கில் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஆசிய வலுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்ட சென்னை அயனாவரத்தை சேர்ந்த வீரர் நவீன் 3 தங்கப்பதக்கமும், ஒரு வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார். அவருக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story