துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 20 May 2019 9:45 PM GMT (Updated: 20 May 2019 9:16 PM GMT)

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.


* உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (12,355 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3-வது இடத்திலும், ஆஸ்திரியா வீரர் டோமினிக் திம் 4-வது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 5-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (6,486 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். இத்தாலி ஓபன் பட்டத்தை வென்ற செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 7-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறினார். ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 4-வது இடத்தில் தொடருகிறார். ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கும், 5-வது இடத்தில் இருந்த கிவிடோவா (செக்குடியரசு) 6-வது இடத்துக்கும் சரிந்து இருக்கிறார்கள்.

* மும்பை 20 ஓவர் லீக் போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் மேற்கு மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வடக்கு மும்பை பாந்தர்ஸ் அணியை தோற்கடித்தது. மேற்கு மும்பை அணிக்காக களம் கண்ட தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 24 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்தார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஆன்டி பிசெல் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியில் புவனேஷ்வர்குமார், பும்ரா, முகமது ஷமி போன்ற சிறந்த பந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் இங்கிலாந்து ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4-வது வீரராக டோனி களம் இறங்கலாம். அவர் எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை படைத்தவர்’ என்று தெரிவித்தார்.

* தேசிய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. இதில் சுமார் 1,000 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். தகுதி சுற்று ஆட்டம் இன்று முதல் 23-ந் தேதி காலை வரை நடைபெறுகிறது. அதன் பிறகு மாலையில் பிரதான சுற்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் காயத்ரி (ஐதராபாத்), உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் களத்தில் கலக்க உள்ளனர்.


Next Story