துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 22 May 2019 10:50 PM GMT (Updated: 2019-05-23T04:20:56+05:30)

உலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


* இந்திய அணியில் நிறைய ‘மேட்ச் வின்னர்கள்’ இருப்பதாகவும், உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பெண்கள் அணியின் கேப்டன் மிதாலிராஜ் கூறியுள்ளார்.

* இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் கைப்பற்றுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ ஆருடம் கூறியுள்ளார். ‘வார்னர் ரன் குவிக்கும் வேட்கையில் இருக்கிறார். அவர் ஆடும் விதத்தையும், அவரது கண்களை பார்த்தாலே இது புரியும். நான் பார்த்தமட்டில் அவர் இப்போது தான் பேட்டிங்கில் மிகச்சிறந்த நிலையில் இருக்கிறார்.’ என்றும் குறிப்பிட்டார்.

* உலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் நேற்று அதிகாரபூர்வமற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் மோதியது. சவுதம்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 46.2 ஓவர்களில் 229 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 38.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 230 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஸ்டீவன் சுமித் (76 ரன்), ஷான் மார்ஷ் (55 ரன்) அரைசதம் அடித்தனர்.

* இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட்டில் நாட்டிங்ஹாம்ஷைருக்கு எதிரான ஆட்டத்தில் ஹாம்ஷைர் அணிக்காக களம் இறங்கிய ரஹானே 2-வது இன்னிங்சில் 119 ரன்கள் (197 பந்து, 14 பவுண்டரி) எடுத்தார். இதன் மூலம் கவுண்டி கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற சிறப்பை ரஹானே பெற்றார்.

* இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 12-10, 11-3, 11-9 என்ற செட் கணக்கில் மில்லி டாம்லின்சனை (இங்கிலாந்து) தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 9-11, 4-11, 11-7, 6-11 என்ற செட் கணக்கில் எகிப்து வீரர் கரிம் அப்டெல் கவாத்திடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் இந்திய வீரர் ரமித் தாண்டன் முதல் சுற்றில் தோல்வி கண்டு நடையை கட்டினார்.


Next Story