துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 25 May 2019 10:00 PM GMT (Updated: 25 May 2019 8:57 PM GMT)

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார். இதனால் அவர் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. விஜய் சங்கர் காயத்துக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் விஜய் சங்கரின் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘விஜய் சங்கருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் அவருக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவர் குழு அவர் காயத்தில் இருந்து மீண்டு வர உதவி செய்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் சங்கரின் காயம் லேசானது என்று தெரியவந்ததால் இந்திய அணி நிம்மதி அடைந்துள்ளது.

* இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்க தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த புதிய கட்டுப்பாட்டால் அந்த அணியின் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். ஜூன் 12-ந் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு தங்களுடன் குடும்பத்தினர் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது தடை முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. ஜூன் 16-ந் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் அணி வீரர்களுடன் அவரது குடும்பத்தினர் சேர்ந்து கொள்ளலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்து இருக்கிறது.

* உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 3) துருக்கியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவின் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ரஜத் சவுகான், அபிஷேக் வர்மா, அமன் சைனி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 235-230 என்ற புள்ளி கணக்கில் ரஷிய அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் பெண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி 226-228 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்திடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.

* பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் சவுதம்டனில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார்கள். இந்த போட்டியை காண வந்து இருந்த ரசிகர்களில் சிலர் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னருக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். அவர்கள் களம் இறங்கும் போது ‘மோசடி பேர் வழி’ என்று உரக்க கத்தினார்கள்.

Next Story