துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 29 May 2019 10:30 PM GMT (Updated: 29 May 2019 10:17 PM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது.

* உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் 17 வயதான இந்திய வீராங்கனை மானு பாகெர் இறுதி சுற்றில் 201 புள்ளிகள் பெற்று 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். துப்பாக்கியில் ஏற்பட்ட பிரச்சினை மானு பாகெருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் 2020–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான கோட்டாவை உறுதி செய்தார். இந்த பந்தயத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான கிரீஸ் வீராங்கனை அன்னா கோராககி 241.4 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், சீன வீராங்கனை கியான் வெய் 239.6 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா வீராங்கனை கிம் மின்ஜூங் 220.8 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

* கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பிரேசில் அணியில் இடம் பிடித்துள்ள நட்சத்திர வீரர் நெய்மார் இடது முழங்காலில் காயம் அடைந்தார். இதனால் அவர் பயிற்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அவரது காயம் குணமடைய எத்தனை நாட்கள் பிடிக்கும் என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகர்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியின் பந்து வீச்சு பலமான ஒன்றாகும். இது நமது அணிக்கு ஒரு சாதகமான அம்சமாகும். ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு மோசமாக அமைவது அரிதானதாகும். 2–வது வேகப்பந்து வீச்சாளராக முகமது ‌ஷமியை பயன்படுத்த வேண்டும். ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் நல்ல பார்மில் இருக்கிறார். இந்திய அணியில் வித்தியாசமாக பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். நம்மிடம் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது ஒன்று தான் குறையாகும். ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகும். அந்த அணி எளிதில் அரைஇறுதிக்கு முன்னேறும்’ என்று தெரிவித்தார்.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆட்டத்தின் போது எனக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக டோனியிடம் சென்று ஆலோசனை பெறுவேன். அவர் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர். அவர் எனக்கு மட்டுமின்றி அணியில் உள்ள எல்லா வீரர்களுக்கும் உதவுவார். டோனி ஸ்டம்புக்கு பின்னால் நின்றாலும் அவரது பார்வை எங்கள் மீதும், பேட்ஸ்மேன் மீதும் இருக்கும். பேட்ஸ்மேன்களின் உடல் அசைவுகளை வைத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை சரியாக கணிக்கும் திறன் படைத்தவர். பேட்ஸ்மேன்களின் கால் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கும் டோனி, சில பந்துகள் வீசிய பிறகு நாம் எந்த மாதிரி பந்து வீச வேண்டும் என்பதை கணித்து சொல்லி விடுவார். அவர் சொல்வது நமக்கு சரியானதாக அமையும். விக்கெட் கீப்பிங், பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய எல்லா வி‌ஷயங்களிலும் அவர் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். சில சமயங்களில் அவர் கோபப்பட்டால் அது எங்களது முன்னேற்றத்துக்கானதாக தான் இருக்கும்’ என்று தெரிவித்தார்.


Next Story