அகில இந்திய கைப்பந்து: தென் மத்திய ரெயில்வே அணி ‘சாம்பியன்’


அகில இந்திய கைப்பந்து: தென் மத்திய ரெயில்வே அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 29 Jun 2019 11:40 PM GMT (Updated: 29 Jun 2019 11:40 PM GMT)

சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் தென் மத்திய ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தென் மத்திய ரெயில்வே (செகந்திராபாத்)-சாய் (தலச்சேரி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தென் மத்திய ரெயில்வே அணி 25-20, 25-19, 25-21 என்ற நேர்செட்டில் சாய் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி 25-19, 25-21 என்ற நேர்செட்டில் டாக்டர் சிவந்தி கிளப் அணியை வீழ்த்தியது.

ஆண்கள் பிரிவில் நடந்த முதலாவது அரைஇறுதியில் எஸ்.ஆர்.எம். அணி 20-25, 12-25, 25-18, 25-20, 15-11 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் சுங்க இலாகா (சென்னை) அணி 25-23, 22-25, 27-25, 22-25, 16-14 என்ற செட் கணக்கில் வருமான வரி (குஜராத்) அணியை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்.-சுங்க இலாகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி முடிந்ததும் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு எஸ்.என்.ஜெ. குழும நிர்வாக இயக்குனர் எஸ்.என். ஜெயமுருகன் தலைமை தாங்கினார். ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் ஜெ. ஸ்ரீநிஷா, ரோமா குழும நிர்வாக இயக்குனர் ராஜன், ஜி.டி. போஸ் நினைவு ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் அஜித் போஸ், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார்கள். சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு எஸ்.என்.ஜெ. கோப்பையுடன் ரூ.75 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ஸ்ரீபாலாஜி மருத்துவ கல்லூரி கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 3-வது, 4-வது இடம் பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.40 ஆயிரமும், ரூ.30 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில் தொழில் அதிபர்கள் செல்வகணேஷ், வெங்கடசாமி, திருப்பூர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ரங்கசாமி, திருவாரூர் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சீலன், திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் குப்புசாமி, போட்டி அமைப்பு குழு செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story