உலக மல்யுத்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார், சுஷில்குமார்


உலக மல்யுத்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார், சுஷில்குமார்
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 21 Aug 2019 5:02 AM GMT)

உலக மல்யுத்த போட்டிக்கான இந்திய அணியில் சுஷில்குமார் இடம் பிடித்துள்ளார்.

புதுடெல்லி, 

உலக மல்யுத்த போட்டிக்கான இந்திய அணியில் சுஷில்குமார் இடம் பிடித்துள்ளார்.

தகுதி சுற்றில் வெற்றி

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினரை முடிவு செய்வதற்காக இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் தகுதி சுற்று போட்டி டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் 74 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் சுஷில்குமார், ஜிதேந்தர் குமார் ஆகியோர் மோதினார்கள். பரபரப்பாக அரங்கேறிய இந்த பந்தயத்தில் ஜிதேந்தர் குமாருக்கு இடது கண்ணிலும், முழங்கையிலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று தொடர்ந்து பங்கேற்றார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுஷில்குமார் 4-2 என்ற புள்ளி கணக்கில் ஜிதேந்தர்குமாரை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

8 ஆண்டுக்கு பிறகு...

டெல்லியை சேர்ந்த 36 வயதான சுஷில்குமார் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்றவர் ஆவார். மேலும் 2010-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக போட்டியில் பங்கேற்க இருக்கிறார். தோல்வி அடைந்த ஜிதேந்தர் குமாருக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 79 கிலோ எடைப்பிரிவு தகுதி சுற்றில் வீர்தேவ் குலியாவை சந்திக்கிறார். இதில் ஜிதேந்தர்குமார் வெற்றி பெற்றால் இந்திய அணியில் இடம் பெறுவார்.

உலக மல்யுத்த போட்டிக்கான இந்திய ஆண்கள் அணியில் ரவி தாஹியா (57 கிலோ), ராகுல் அவாரே (61 கிலோ), பஜ்ரங் பூனியா (65 கிலோ), கரண் (70 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ), பர்வீன் (92 கிலோ), மாசாம் காத்ரி (97 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

தோல்வி அடைந்த வீரர் புகார்

தோல்வி கண்ட ஜிதேந்தர் குமார், சுஷில்குமார் மீது குற்றம்சாட்டி இருக்கிறார். போட்டிக்கு பிறகு ஜிதேந்தர் குமார் கருத்து தெரிவிக்கையில், ‘சுஷில்குமார் எப்படி சண்டையிட்டார் என்பதை எல்லோரும் பார்த்தார்கள். நான் மல்யுத்தம் மட்டுமே செய்தேன். ஆனால் அவர் அப்படி செயல்படவில்லை. கண்ணில் காயம் அடைந்த பிறகு போட்டியிடுவதில் எனக்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த போட்டிக்காக நான் நன்றாக தயாராகி இருந்தேன். போட்டியின் போது சுஷில்குமார் சிகிச்சை என்ற பெயரில் 2 முறை தேவையில்லாமல் ஓய்வு எடுத்தார். ஒன்றிரண்டு நாளில் உடல் தகுதியை பெற்று விடுவேன். 79 கிலோ எடைப்பிரிவில் இடம் பிடிக்க முயற்சிப்பேன்’ என்றார்.

ஜிதேந்தர்குமாரின் பயிற்சியாளர் ஜெய்வீர் அளித்த பேட்டியில், ‘சுஷில்குமார் வேண்டுமென்றே தான் இந்த மாதிரி செய்தார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் அவர் இதே தந்திரத்தை தான் கையாண்டார். நடுவர்களும் அவருக்கு ஆதரவாகவே நடந்து கொண்டனர். சுஷில்குமாருக்கு எதிராக யாரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர்’ என்று தெரிவித்தார்.

சுஷில்குமார் விளக்கம்

இந்த சம்பவம் குறித்து சுஷில்குமார் விளக்கம் அளிக்கையில், ‘நான் வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை. ஜிதேந்தர் குமார் எனக்கு இளைய சகோதரர் போன்றவர். இது நல்ல போட்டியாக அமைந்தது. இதுபோன்ற நிலையான போட்டி இருந்தால் நமது நாட்டுக்கு நல்ல முடிவு கிடைக்கும். களத்தில் கடுமையாக நடந்து கொள்வது என்னுடைய பாணி கிடையாது. ஆட்ட நுணுக்கத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்துவது தான் எனது பாணியாகும். மல்யுத்த பந்தயத்தில் வெல்வது என்பது ஒரு கலையாகும்’ என்று கூறினார்.

Next Story