புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸ் 5-வது வெற்றி


புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸ் 5-வது வெற்றி
x
தினத்தந்தி 22 Aug 2019 10:30 PM GMT (Updated: 22 Aug 2019 10:00 PM GMT)

புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸ் 5-வது வெற்றி

சென்னை, 

புரோ கபடி லீக் போட்டி தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 35-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்தது.

புரோ கபடி

12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணியை சந்தித்தது.

தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 15-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

பெங்கால் வாரியர்ஸ் வெற்றி

பிற்பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் கை ஓங்கியது. அந்த அணி அடுத்தடுத்து 2 முறை பாட்னா பைரட்சை ‘ஆல்-அவுட்’ செய்து அதிர்ச்சி அளித்ததுடன் 18 புள்ளிகள் வரை முன்னிலை வித்தியாசத்தை அதிகரித்தது. கடைசி கட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்த பாட்னா பைரட்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து ஆறுதல் கண்டாலும், வெற்றியை நெருங்க முடியவில்லை. முடிவில் பெங்கால் வாரியர்ஸ் 35-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை வீழ்த்தியது. பெங்கால் வாரியர்ஸ் அணியில் மனிந்தர்சிங் 10 புள்ளியும், பிரபஞ்சன் 6 புள்ளியும் சேர்த்தனர்.

9-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் வாரியர்ஸ் பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். 2 தோல்வியும், 2 டையும் கண்டுள்ள அந்த அணி 2-வது இடத்தில் உள்ளது. 9-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா பைரட்ஸ் சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும். 3 ஆட்டத்தில் வெற்றி கண்டு இருக்கும் பாட்னா பைரட்ஸ் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

சென்னை சுற்று போட்டி இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதே மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் -பாட்னா பைரட்ஸ் (இரவு 7.30 மணி), தமிழ் தலைவாஸ் -மும்பை (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன. 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வி, 2 டையுடன் 6-வது இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி உள்ளூரில் இந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. இங்கு 2 ஆட்டத்தில் தோல்வி (பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக) கண்டது. புனேரி பால்டன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘டை’ செய்தது. இன்றைய ஆட்டத்திலாவது தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story