உலக பேட்மிண்டன் போட்டி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், சிந்து


உலக பேட்மிண்டன் போட்டி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், சிந்து
x
தினத்தந்தி 24 Aug 2019 11:00 PM GMT (Updated: 24 Aug 2019 8:53 PM GMT)

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பாசெல், 

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சிந்து அபாரம்

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஆல்இங்கிலாந்து சாம்பியனான சீனாவின் சென் யூ பேவுடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-7, 21-14 என்ற நேர் செட்டில் சென் யூ பேவை துவம்சம் செய்து தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

2017, 2018-ம் ஆண்டுகளிலும் சிந்து இறுதிப்போட்டிக்கு வந்திருந்தார். ஆனால் அவ்விரு இறுதி ஆட்டங்களிலும் தோற்று வெள்ளிப்பதக்கமே பெற்றார். 42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இதுவரை எந்த இந்தியரும் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்ததில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்க சிந்துவுக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஒகுஹராவுடன் மோதுகிறார்

தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் 24 வயதான சிந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனும், 4-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் மல்லுகட்டுகிறார். முன்னதாக ஒகுஹரா அரைஇறுதி ஆட்டத்தில் 1 மணி 23 நிமிடங்கள் போராடி 17-21, 21-18, 21-15 என்ற செட் கணக்கில் ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) விரட்டினார்.

சிந்துவும், ஒகுஹராவும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 8-ல் சிந்துவும், 7-ல் ஒகுஹராவும் வெற்றி கண்டுள்ளனர். 2017-ம் ஆண்டு உலக பேட்மிண்டன் இறுதி சுற்றில் இதே ஒகுஹராவிடம் தான் சிந்து தோல்வியை தழுவினார். அதற்கு வட்டியும் முதலுமாக பழிதீர்ப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

சாய் பிரனீத்துக்கு வெண்கலம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் சாய் பிரனீத், ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவுடன் மோதினார். இதில் மோமோட்டாவின் அதிரடியை சமாளிக்க முடியாமல் திணறிய சாய் பிரனீத் 13-21, 8-21 என்ற நேர் செட்டில் ‘சரண்’ அடைந்தார்.

இருப்பினும் அரைஇறுதியை எட்டியதன் மூலம் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.

உலக பேட்மிண்டனில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை சாய் பிரனீத் பெற்றார்.

Next Story