உலக பேட்மிண்டன் போட்டி: தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார் சிந்து


உலக பேட்மிண்டன் போட்டி: தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார் சிந்து
x
தினத்தந்தி 26 Aug 2019 12:04 AM GMT (Updated: 26 Aug 2019 12:04 AM GMT)

உலக பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஒகுஹராவை ஊதித்தள்ளிய இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்தார்.

பாசெல்,

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது.

இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் மோதினார்.

பலம் வாய்ந்த வீராங்கனைகள் கோதாவில் குதித்ததால் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் போக்கு அதற்கு நேர்மாறாக அமைந்தது.

‘தங்க மங்கை’ சிந்து

இதில் தொடக்கம் முதலே சிந்துவின் கை வெகுவாக ஓங்கியது. ஆக்ரோஷமாக ஆடிய சிந்துவின் சில ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒகுஹரா திணறினார். இதே போல் வலை அருகே சென்ற பந்தை மெதுவாக தட்டி விடுவதிலும் சிந்து கச்சிதமாக செயல்பட்டு புள்ளிகளை குவித்தார். முதல் செட்டை எளிதில் வசப்படுத்திய சிந்து, 2-வது செட்டிலும் ஒகுஹராவுக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் அதே வேகத்தில் கபளகரம் செய்தார்.

முடிவில் பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஒகுஹராவை பந்தாடி தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். ஒரு தரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 38 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. 

முதல்முறையாக....

இதே ஒகுஹராவிடம் தான் சிந்து 2017-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் 110 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார். அந்த தோல்விக்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டார்.

42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட சிந்து, இந்த முறை தவறுக்கு இடம் கொடுக்காமல் விளையாடி தனது கனவை நனவாக்கி இருக்கிறார்.

ஐதராாத்தை சேர்ந்த 24 வயதான சிந்து உலக பேட்மிண்டனில் வெல்லும் 5-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2013, 2014-ம் ஆண்டுகளில் வெண்கலமும், 2017, 2018-ம் ஆண்டுகளில் வெள்ளியும் வென்று இருந்தார். இதன் மூலம் உலக பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக பதக்கங்களை மகசூல் செய்த வீராங்கனையான முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஜாங் நிங்கின் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) சாதனையை சிந்து சமன் செய்தார்.

பயிற்சியாளர் பேட்டி

இந்த ஆட்டதை நேரில் கண்டு களித்து அவ்வப்போது ஆலோசனை வழங்கிய பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ‘முந்தைய இரண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டங்களை எடுத்துக் கொண்டால், சிந்து கடுமையான சுற்றுகளை விளையாடிய பிறகு இறுதி ஆட்டத்திற்கு வந்ததால் களைப்படைந்தது போன்று தெரிந்தது. ஆனால் இந்த உலக போட்டியில் அவரது அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. நீண்ட நேரம் இடைவிடாது பந்தை திருப்பி அடிக்கும் வகையில் ஆடுவது அல்லது அதிரடியான ஷாட்டுகளை தொடுப்பது என்ற இரண்டு விதமான திட்டங்களுடன் சிந்து களம் இறங்கினார். சிந்து முதல் புள்ளியில் இருந்தே அதிரடியாக ஆடியதற்கு பலன் கிடைத்திருக்கிறது. இந்த தங்கப்பதக்கம் நிச்சயம் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இனி அவரது அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வது தான்’ என்றார்.

ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து

வரலாறு படைத்த சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், ‘உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்துவுக்கு எனது வாழ்த்துகள். இது ஒட்டுமொத்த தேசத்தின் பெருமைமிக்க தருணம். சிந்துவின் கடின உழைப்பு, விடா முயற்சி இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரன் ரிஜிஜூ, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட தலைவர்கள் பலரும் சிந்துவின் சாதனையை பாராட்டியுள்ளனர்.

இந்தியாவுக்கு 10-வது பதக்கம்

உலக பேட்மிண்டனில் இந்தியா இதுவரை 10 பதக்கங்களை சொந்தமாக்கியுள்ளது. இதில் சிந்துவின் பங்களிப்பு மட்டும் 5 பதக்கம் ஆகும். சாய்னா நேவால் 2 பதக்கமும் (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்), பிரகாஷ் படுகோனே, சாய் பிரனீத் (நடப்பு தொடரில்) தலா ஒரு வெண்கலமும், பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா-அஸ்வினி ஒரு வெண்கலமும் வென்று இருக்கிறார்கள்.

பதக்கம் தாயாருக்கு சமர்ப்பணம்

உலக பேட்மிண்டனில் மகுடம் சூடிய பிறகு சிந்து நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது தேசத்திற்காக இந்த பதக்கத்தை வென்றுள்ளேன். இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். கடந்த இரண்டு உலக பேட்மிண்டன் இறுதி ஆட்டங்களில் தோற்று இருந்தேன். இந்த நிலைமையை இப்போது மாற்றி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்த தருணத்திற்காகத் தான் நீண்ட காலமாக காத்திருந்தேன். ஒரு வழியாக இப்போது உலக சாம்பியன் ஆகி விட்டேன். எனது பயிற்சியாளர்கள் கிம், கோபிசந்த், உதவியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதக்கத்தை எனது தாயார் விஜயாவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருக்கு இன்று (நேற்று) பிறந்த நாள். பிறந்தநாள் பரிசாக இதை வழங்குகிறேன்’ என்றார்.


Next Story