புதுக்கோட்டை அருகே மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கியது - டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் புதிய கிளப் ஹவுஸ் திறப்பு


புதுக்கோட்டை அருகே மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கியது - டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் புதிய கிளப் ஹவுஸ் திறப்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 12:08 AM GMT (Updated: 30 Aug 2019 12:08 AM GMT)

புதுக்கோட்டை அருகே மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று தொடங்கியது. மேலும் அங்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் புதிய கிளப் ஹவுஸ் திறந்து வைக்கப்பட்டது.

திருச்சி,

‘தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்’ மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் 45-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி (ஷாட்கன்) புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆவாரங்குடிபட்டி கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடுதல் தளத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ‘யெஸ்’ என கட்டளை பிறப்பித்ததும் பறந்து சென்ற தட்டுகளை டபுள் டிராப் முறையில் துப்பாக்கியால் குறிபார்த்து சுட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

சிங்கிள் டிராப், டபுள் டிராப் மற்றும் ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டியில் மாநில முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ராஜா ராஜகோபால தொண்டைமான், அவரது மகன் பிரித்விராஜ் தொண்டைமான், மகள் ராதா நிரஞ்சனா ஆகியோரும் போட்டியில் கலந்து கொண்டனர். 1-ந்தேதி வரை போட்டி தொடர்ந்து நடக்கிறது.

ஆவாரங்குடிபட்டி துப்பாக்கி சுடும் தளத்தில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் புதிய கிளப் ஹவுஸ் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் டி.வி.சீதாராம ராவ், செயலாளர் ரவிசங்கர், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜகோபால தொண்டைமான், முன்னாள் மேயரும், கிளப்பின் பொருளாளருமான சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story