உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் இன்று தொடக்கம்


உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 26 Sep 2019 11:45 PM GMT (Updated: 26 Sep 2019 9:31 PM GMT)

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் இன்று தொடங்குகிறது.

தோகா,

17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 6-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 209 நாடுகளைச் சேர்ந்த 1928 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்தியா சார்பில் 27 வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். உலகத்தரம் வாய்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, உலக ஜூனியர் 400 மீட்டர் ஓட்டத்தின் சாம்பியன் ஹிமா தாஸ் ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியது, இந்தியாவுக்கு பின்னடைவாகும். முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட நீரஜ் சோப்ரா இப்போது தான் பயிற்சியை தொடங்கியுள்ளார். அசாமைச் சேர்ந்த இளம் புயல் ஹிமா தாஸ், முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அணியில் இடம் பெற்றுள்ள 27 பேரில் 13 பேர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். தொடர் ஓட்டம் தான் இந்தியாவுக்கு சற்று நம்பிக்கை தருகிறது. டாப்-8 இடத்திற்குள் வந்தால் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். அது தான் இந்திய குழுவினரின் இலக்காகும்.

தேசிய அணியின் தலைமை உதவி பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர் கூறுகையில், ‘ஹிமா தாசின் விலகலால் பெரிய அளவில் தாக்கம் இருக்காது. எங்களால் கலப்பு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இறுதிசுற்றை எட்ட முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.

கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை அர்ச்சனா 200 மீட்டர் ஓட்டத்திலும், ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான திருப்பூரைச் சேர்ந்த தருண் அய்யாசாமி 400 மீட்டர் தடை ஓட்டத்திலும் கால் பதிக்கிறார்கள். டுட்டீ சந்த் (100 மீட்டர் ஓட்டம்), ஜின்சன் ஜான்சன் (1500 மீட்டர்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), தஜிந்தர் பால் சிங் தூர் (குண்டு எறிதல்) உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்களது பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினாலே ஆச்சரியமான விஷயமாக இருக்கும்.

36 ஆண்டு கால உலக தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு இதுவரை ஒரே ஒரு பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. 2003-ம் ஆண்டு பாரீசில் நடந்த உலக தடகளத்தில் இந்தியாவின் அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலம் வென்று இருந்தார். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.

அமெரிக்கா, கென்யா, ஜமைக்கா போன்ற நாடுகள் தான் உலக தடகளத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த முறையும் அவர்கள் தான் கோலோச்சுவார்கள்.

உலகின் அதிவேக மனிதர் யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்காவின் 23 வயதான கிறிஸ்டியன் கோல்மன் மகுடம் சூட பிரகாசமான வாய்ப்புள்ளது. அவருக்கு டிவைன் ஒடுடுரு (நைஜீரியா), அகானி சிம்பினி (தென்ஆப்பிரிக்கா), ஜார்னெல் ஹக்ஸ் (இங்கிலாந்து) உள்ளிட்டோர் கடும் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன் 37 வயதான அமெரிக்காவின் ஜஸ்டின் கேத்லின் முன்பு போல் பார்மில் இல்லாததால் சாதிப்பது கடினம் தான். 100 மீட்டர் ஓட்டத்தின் உலக சாதனையாளரான ஜமைக்காவின் உசேன் போல்ட் ஓய்வுக்கு பிறகு நடக்கும் முதல் உலக தடகளம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனைகளான ஒலிம்பிக் சாம்பியன் எலைன் தாம்சன், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் ஷெல்லி அன் பிராசெர் பிரைஸ் ஆகியோரில் ஒருவர் வாகை சூட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

Next Story