சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி


சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 5 Nov 2019 11:47 PM GMT (Updated: 5 Nov 2019 11:47 PM GMT)

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

புஜோவ்,

மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரநிலையில் 42-வது இடத்தில் இருக்கும் சீன தைபே வீராங்கனை பாய் யு போவை எதிர்கொண்டார். 74 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் சிந்து 13-21, 21-18, 19-21 என்ற செட் கணக்கில் பாய் யு போவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 4-வது முறையாக பாய் யு போவுடன் மோதிய சிந்து சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

கடந்த ஆகஸ்டு மாதம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று சரித்திரம் படைத்த சிந்து அதன் பிறகு தொடர்ந்து சறுக்கலையே சந்தித்து வருகிறார். அதன் பிறகு சாங்ஜோவில் நடந்த சீன ஓபன் போட்டியின் 2-வது சுற்றிலும், கொரியா ஓபன் போட்டியில் முதல் சுற்றிலும், டென்மார்க் ஓபனில் 2-வது சுற்றிலும், பிரெஞ்ச் ஓபனில் 2-வது சுற்றிலும் அவர் தோற்று போனது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 29-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய் 17-21, 18-21 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ராஸ்முஸ் ஜெம்கேவிடம் வீழ்ந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-9, 21-15 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் பிலிப் செவ்-ரையான் செவ் இணையை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை 21-19, 21-19 என்ற நேர்செட்டில் கனடாவின் ஜோஸ்வா-ஜோஸ்பின் ஜோடியை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை தோல்வியை சந்தித்தது.


Next Story