சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: லக்னோவில் இன்று தொடக்கம்


சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: லக்னோவில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 25 Nov 2019 10:33 PM GMT (Updated: 25 Nov 2019 10:33 PM GMT)

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று துவங்குகிறது.


* சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் கடைசி நேரத்தில் விலகினார். பி.வி.சிந்துவும் இந்த போட்டியில் விளையாடவில்லை. இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சாய் பிரனீத், சவுரப் வர்மா, காஷ்யப், பிரனாய், லக்‌ஷயா சென் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் களம் காணுகிறார்கள்.

* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில், லோதா கமிட்டி சிபாரிசின்படி இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறையில் செய்யப்பட்ட திருத்தங்களை மாற்றம் செய்ய ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாயின. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என்ற விதிமுறையை நீர்த்து போக செய்ய நாங்கள் நினைக்கவில்லை. ஒருவர் தொடர்ந்து 6 வருடம் பதவி வகித்தால், 3 ஆண்டு இடைவெளி விட்டு தான் அடுத்ததாக பதவிக்கு வர முடியும் என்ற விதிமுறையால் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைவர் செயலாளர் தவிர மற்ற நிர்வாகிகளுக்கு இந்த விதிமுறையில் விலக்கு அளித்தால் நன்றாக இருக்கும் என்பதே எங்கள் கருத்தாகும்’ என்று தெரிவித்தார்.

* கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு (பிங்க் பால்) டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதனால் 4-வது மற்றும் 5-வது நாள் போட்டியை காண டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் பணி தொடங்கி விட்டதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

* சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு மின்சார வாரிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்ட் அணியை வென்றது.


Next Story