சென்னை ஓபன் செஸ்: ரஷிய வீரர் சாம்பியன்


சென்னை ஓபன் செஸ்: ரஷிய வீரர் சாம்பியன்
x
தினத்தந்தி 25 Jan 2020 11:55 PM GMT (Updated: 25 Jan 2020 11:55 PM GMT)

சென்னை ஓபன் செஸ் தொடரில், ரஷிய வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை,

டாக்டர் என்.மகாலிங்கம் கோப்பைக்கான 12-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர் சோழிங்கநல்லூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் 10-வது மற்றும் கடைசி சுற்று நேற்று நடந்தது. புள்ளி பட்டியலில் முன்னணியில் இருந்த ரஷிய கிராண்ட்மாஸ்டர்கள் பொங்ராடோவ் பவெல், ரோஜூம் இவான் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. பெரு வீரர் மார்ட்டினஸ் அல்கன்தரா ஜோஸ் எடுவர்டோ தன்னை எதிர்த்த இந்திய வீரர் வெங்கடேசை தோற்கடித்தார். இந்தியாவின் விஷ்ணு பிரசன்னா, ரஷியாவின் கோகனோவ் அலெக்சியை வீழ்த்தினார்.

10 சுற்று முடிவில் ரஷியாவின் பொங்ராடோவ் பவெல், இந்தியாவின் விஷ்ணு பிரசன்னா, பெருவின் மார்ட்டினஸ் அல்கன்தரா உள்பட 8 வீரர்கள் தலா 8 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இதையடுத்து தரவரிசையில் வலுவான வீரர்களை வீழ்த்தியதன் அடிப்படையில் பெங்ராடோவ் பவெல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.3 லட்சம் பரிசத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பெற்ற மார்ட்டினஸ் அல்கன்தரா ரூ.2 லட்சம் பெற்றார்.

பரிசுகளை தமிழ்நாடு செஸ் சங்க பொதுச்செயலாளர் ஸ்டீபன் பழனிசாமி, சக்தி குரூப் சேர்மன் மாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.


Next Story