இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 30 Jan 2020 12:18 AM GMT (Updated: 30 Jan 2020 12:18 AM GMT)

தென்ஆப்பிரிக்காவில் நடந்த சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 87.86 மீட்டர் தூரம் எறிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

போட்செஸ்ட்ரூம்,

தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செஸ்ட்ரூமில் சர்வதேச தடகள போட்டி (ஏ.சி.என்.இ. லீக் ) நடந்தது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக கணக்கில் கொள்ளப்பட்ட இந்த போட்டியில் வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆபரேஷன் செய்ததால் பெரிய போட்டி எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்த இந்திய இளம் தடகள வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். 2018-ம் ஆண்டு ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு அவர் கலந்து கொண்ட முதல் போட்டி இதுவாகும்.

இதில் ஈட்டி எறிதலில் 22 வயதான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது முயற்சியில் 87.86 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பந்தயத்துக்கு தகுதி பெற குறைந்தபட்சம் 85 மீட்டர் தூரம் வீச வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் 77.61 மீட்டர் தூரம் வீசி 2-வது இடம் பிடித்தார்.

நீரஜ் சோப்ரா வெற்றியின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தடகளத்தில் இந்தியாவுக்கு 4-வது வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு (2019) ஜப்பானில் நடந்த ஆசிய நடைப்பந்தயத்தின் மூலம் இந்திய வீரர் கே.டி.இர்பானும், தோகாவில் நடந்த உலக தடகள போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தின் மூலம் இந்திய வீரர் அவினாஷ் சாப்லேவும், அதே போட்டியில் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் மூலம் இந்திய அணியும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தன.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில், ‘இந்த போட்டியில் வெளிப்படுத்திய திறமையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த போட்டிக்கு செல்லுகையில் என் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தி கொள்ளவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் திறமையை பரிசோதிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். போட்டிக்கு தயாராகுவதற்காக ஈட்டி எறிகையில் நன்றாக செயல்பட்டேன். இதேபோல் முதல் மூன்று முயற்சியிலும் 81 முதல் 82 மீட்டர் வரை எறிந்தேன். சில குறைபாடுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதில் கவனம் செலுத்த வேண்டும். பழைய நிலைக்கு திரும்பி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் மாதங்களில் அதிக போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். காயத்தில் இருந்த போது எனக்கு ஆதரவும், ஆலோசனையும் வழங்கிய அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். வலுவாக களம் திரும்பி நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.


Next Story