‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து தொடக்க ஆட்டத்தில் சென்னை ஸ்போர்ட்ஸ் அகாடமி வெற்றி


‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து தொடக்க ஆட்டத்தில் சென்னை ஸ்போர்ட்ஸ் அகாடமி வெற்றி
x
தினத்தந்தி 12 Feb 2020 11:25 PM GMT (Updated: 12 Feb 2020 11:25 PM GMT)

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ஆண்களுக்கான ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது.

சென்னை,

17-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.), சென்னை சிட்டி போலீஸ், லயோலா, டி.ஜி.வைஷ்ணவா உள்பட 31 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் மற்றும் ‘நாக்-அவுட்’ முறையில் போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தலைமை தாங்கினார்.

வருமான வரி இணை கமிஷனர் சங்கர் கணேஷ் கருப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கைப்பந்து சங்க இணைச் செயலாளர் ஏ.மகேந்திரன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் பழனியப்பன், இணை செயலாளர் ஸ்ரீகேசவன், துணைத்தலைவர் உபைதுர் ரகுமான் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்போர்ட்ஸ் அகாடமி-லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிகள் மோதின.

இதில் சென்னை ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 25-14, 25-19 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் குருநானக் கல்லூரி அணி 25-20, 25-11 என்ற நேர்செட்டில் சென்னை பிரண்ட்ஸ் கிளப் அணியை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் லயோலா அணி 25-15, 25-15 என்ற நேர்செட்டில் ஐ.சி.எப். தெற்கு காலனி அணியை தோற்கடித்தது.

Next Story